வாக்குச்சீட்டுக்கு மாறும் ட்ரம்ப்! நண்பர் மோடியும் மாறுவாரா?

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று தன்னுடைய முதல் அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டினார். பல்வேறு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டன. இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த ட்ரம்ப் வாக்குச்சீட்டு முறைக்கு அமெரிக்க அதிபர் தேர்தலை மாற்றவேண்டும் என்று அதிரடியாகக் கூறியுள்ளார். மேலும் நாடு முழுவதும் அதிபர் தேர்தல் ஒரே நாளில் நடைபெற வேண்டும். வாக்காளர் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று அதிரடியாக கூறியுள்ளார்.
அமெரிக்காவில் தேர்தல் விதிமுறைகள் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும். தேர்தலை நடத்தி வாக்கு எண்ணிக்கையை முடித்து தெரிவிக்க வேண்டிய பொறுப்பு கவுண்டி(மாவட்ட) நிர்வாகத்திற்கே உண்டு. ஒவ்வொரு கவுண்டியிலும் வெவ்வேறு முறையில் தேர்தல் நடக்க வாய்ப்பு உள்ளது. பணக்கார கவுண்டியில் வாக்கு எந்திரங்கள் பயன்படுத்துகிறார்கள். ஊர்ப்புறத்தில் உள்ள நிதிவசதி குறைவான, மக்கள் தொகை குறைவாக உள்ள கவுண்டிகளில் இன்னமும் வாக்குச்சீட்டு முறையே பின்பற்றப்படுகிறது. உதாரணத்திற்கு கரூர் , தென்காசி மாவட்டங்களில் ஒன்றில் வாக்கு எந்திரமும் மற்றொன்றில் வாக்குச்சீட்டும் பயன்படுத்தினால் எப்படி இருக்கும்? இப்படித்தான் அமெரிக்காவில் உள்ள கவுண்டிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
அமெரிக்காவில் தேர்தல் நாளில் விடுமுறை கிடையாது. சில அலுவலகங்களில் ஓட்டுப்போடுவதற்காக ஓரிரு மணி நேரம் அனுமதி கிடைக்கும். மணி நேர சம்பளத்திற்கு வேலை பார்ப்பவர்களுக்கு அதுவும் கிடையாது.ஓட்டுப்போடப் போனால் அந்த நேரத்திற்கு சம்பளம் கிடைக்காது. இதற்காகவே தேர்தல் நாளுக்கு முன்னதாகவே வாக்குப்பதிவுகள் நடைபெறும். குறிப்பிட்ட சில அரசு அலுவலகங்களில் மட்டும் இந்த வாக்குப்பதிவு நடக்கும். இதனால் தேர்தல் நாளன்று செல்ல முடியாதவர்கள் முன்னதாகவே வாக்கு செலுத்திவிடுவர். இதுவும் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும். சில மாநிலங்களில் 60 நாட்களுக்கு முன்னதாகவே வாக்குப்பதிவு தொடங்கி விடும். சில மாநிலங்களில் 40 நாட்கள் என இருக்கும். சில மாநிலங்களில் எந்த ஒரு அரசு அடையாள அட்டையைக் காட்டினாலும் வாக்கு செலுத்த அனுமத்திப்பார்கள். சில மாநிலங்களில் அடையாள அட்டை தேவையே இல்லை. அடையாள அட்டைக்குத் தனியாக பணம் செலுத்தித் தான் பெற வேண்டும். அன்றாடக் கூலிகளாக இருப்பவர்களுக்கு இதுவே பெரும் தொகையாகும். இதனால் வாக்களிக்கப் போகாத மக்களும் ஏராளம் உண்டு.
அதிபர் ட்ரம்ப் இந்த முறைகளை எல்லாம் மாற்ற வேண்டும் என்கிறார் அதிபர் ட்ரம்ப். தேர்தல் நாளன்று மட்டும் தான் வாக்குப்பதிவு. எல்லோருக்கும் கட்டாயம் வாக்காளர் அடையாள அட்டை. முக்கியமாக வாக்குச்ச்சீட்டு முறையில் தான் தேர்தல், வாக்கு எந்திரங்களுக்கு முற்றிலுமாக தடை என்று மாற்றம் கோருகிறார் அதிபர் ட்ரம்ப். தேர்தல் நடத்தை விதிகள் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருப்பதால் எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் இந்த மாற்றத்திற்கு சாத்தியமே இல்லை. ஆனால் அதிபர் ட்ரம்ப்பின் குடியரசுக் கட்சி ஆளும் மாநிலங்களில் இந்த மாற்றங்கள் நடக்க வாய்ப்புகள் உள்ளது.
அதிபர் ட்ரம் என்னுடைய நெருங்கிய நண்பர் என்கிறாரே பிரதமர் மோடி. அதிபர் ட்ரம்பின் வாக்குச்சீட்டு முறைக்கு மாறுவாரா பிரதமர் மோடி?