வரி விதித்த ட்ரம்ப்! உடனடியாக பதிலடி கொடுத்த கனடா!!

அமெரிக்காவுக்குள் சட்டப்பூர்வமற்ற முறையில் குடியேறுவதை கனடாவும், மெக்சிகோவும் தடுக்கும் வரையிலும் மற்றும் போதைப் பொருட்கள் அமெரிக்காவுக்குள் வராமல் தடுக்கும் வரையிலும் இரண்டு நாடுகளிலிருந்து வரும் பொருட்களுக்கு தற்போதைய வரிகளுடன் கூடுதலாக தலா 25 சதவீத வரி விதித்துள்ளார் அதிபர் ட்ரம்ப். வரும் செவ்வாய்கிழமை நள்ளிரவிலிருந்து அமலுக்கு வருகிறது இந்த புதிய வரிவிதிப்பு.
மேலும் போதைப் பொருட்கள் சீனாவிலிருந்து அமெரிக்காவுக்குள் வருவதை தடுக்கும் வரையிலும் சீனப் பொருட்கள் மீதும் கூடுதலாக 10 சதவீத வரி விதித்துள்ளார் ட்ரம்ப். அதிபர் ட்ரம்ப் சொல்லும் காரணங்களை நடைமுறையில் எப்படி சாத்தியப்படுத்த முடியும் என்ற வரையறைகள் எதையும் அமெரிக்கத் தரப்பில் தெரிவிக்கப்படவில்லை.
ட்ரம்ப்- ன் வரிவிதிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அமெரிக்காவிலிருந்து வரும் ஆரஞ்ச் ஜூஸ், டென்னஸி விஸ்கி, கெண்டகி பீனட் பட்டர் ஆகிய பொருட்கள் மீது கூடுதல் வரி விதிக்கப்போவதாக கனடா தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகி உள்ளது. என்னய்யா சின்னப்புள்ளத்தனமா ஆரஞ்ச் ஜூஸ், விஸ்கி, பீனட் பட்டர் மீது வரி விதிக்கப்போகுதா கனடா என்று ஆச்சரியப்படுகிறவர்களுக்கு கனடாவின் அரசியல் தந்திரங்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
ஆரஞ்ச் ஜூஸ் உற்பத்தி செய்யும் ஃப்ளோரிடா, விஸ்கி உற்பத்தி செய்யும் டென்னஸி, பீனட் பட்டர் உற்பத்தி செய்யும் கெண்டகி மக்கள் தான் ட்ரம்ப்க்கு அமோக ஆதரவு தந்து வெற்றிக்கு அடிகோலியவர்கள். கனடாவின் வரிவிதிப்பு இந்தத் தொழில் செய்பவர்களுக்கு மந்த நிலையை ஏற்படுத்தும். தொடர்பான வேலை வாய்ப்புகளைக் குறைக்கும், அது மக்கள் மத்தியில் ட்ரம்ப் அரசு மீது அதிருப்தி ஏற்படுத்தும் என்பது தான் கனடாவின் அரசியல் தந்திரமாகும்.
இன்னொரு புறம் வரிவிதிப்புக்கு ட்ரம்ப் சொல்லும் காரணங்கள் சிறுபிள்ளைத்தனமானது என்றாலும், அமெரிக்காவில் உற்பத்தித் தொழிலை ஊக்குவிப்பதற்காகத் தான் இந்த நடவடிக்கைகள் என்று பொருளாதார நிபுணர்களின் கருத்தாகவும் உள்ளது.