பிறப்பால் குடியுரிமைக்கு தடை போட்டார் ட்ரம்ப்! சட்டப்படி செல்லுமா?

அமெரிக்காவின் 47 வது அதிபராக பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு பிறப்பிலேயே கிடைக்கும் குடியுரிமை மீது புதிய ஆணை பிறப்பித்துள்ளார். இதன் படி அமெரிக்காவில் சட்டப்பூர்வமற்ற முறையில் நுழைந்தவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை கிடையாது.
மேலும் சட்டப்பூர்வமாக குடியேறி தற்காலிக விசாவில் இருப்பவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கும் இனி குடியுரிமை வழங்க்கப்பட மாட்டாது. அமெரிக்க குடியுரிமை பெற்றவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு மட்டுமே பிறப்பின் அடிப்படையில் அமெரிக்க குடியுரிமை வழங்கப்படும் என்பதே ட்ரம்ப் கையெழுத்திட்ட "Proteting the Meaning and Value of American Citizenship" ஆணையாகும்.
இந்த ஆணையை எதிர்த்து அமெரிக்க சிவில் லிபர்ட்டிஸ் யூனியன் சட்டப்பூர்வ நடவடிக்கையை எடுத்து விட்டது. இது அமெரிக்க அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. அமெரிக்க அடிப்படை தத்துவத்திற்கு எதிரானது என்று குரல் எழுப்பியுள்ளனர்.
கலிஃபோர்னியா மாநில கவர்னர் கவின் நியுசம் மும் அதிபர் ட்ரம்ப்-ன் ஆணைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்றும் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அமெரிக்க நீதிமன்றங்களில் விரைவில் பல்வேறு வழக்குகளை எதிர்பார்க்கலாம் என்று தெரிகிறது. உச்சநீதிமன்றம் வரை செல்லும் இந்த வழக்குகளின் முடிவைப் பொறுத்தே ட்ரம்ப்-ன் ஆணை அமலுக்கு வரும்.
அதிபர் ட்ரம்ப்-ன் ஆணை அமலுக்கு வந்தால் விசாவில் இருக்கும் இந்தியத் தம்பதிகளுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு இனி குடியுரிமை வழங்கப்படாது என்பதும் குறிப்பிடத் தக்கது.