இத்தாலியில் ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து.. 17 பேர் படுகாயம்
இத்தாலியில் ரயில்கள் நேருக்கு நேர் மோதிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இத்தாலியின் போலோக்னா நகரில் இருந்து ரிமினி என்ற இடத்துக்கு ரயில் ஒன்று புறப்பட்டது. அங்குள்ள பென்சா - போர்லி பகுதிகளுக்கு இடையே சென்றபோது அதே தண்டவாளத்தில் மற்றொரு ரயிலும் வந்து கொண்டிருந்தது. இதை அறிந்த லோகோ பைலட்கள் உடனடியாக ரயிலை நிறுத்த முயன்றனர்.
எனினும் இரு ரயில்களும் நேருக்கு நேர் மோதின. இதில் சில ரயில் பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டன.இதில் பயணிகள் பலரும் காயம் அடைந்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு குழுவினர் அங்கு மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ரயிலுக்குள் சிக்கி படுகாயம் அடைந்த 17 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் விபத்து குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2 passenger trains collide in northern Italy, injuring at least 17 people pic.twitter.com/dMmxfc6JcM
— ᖇᗝᗝᔕᗴᐯᗴᒪ丅 丅ᗴᖇᖇᎥᗴᖇᔕ (@RTerriers) December 11, 2023
முதல்கட்ட விசாரணையில் சிக்னல் கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. இதற்கிடையே ரயில்கள் நேருக்கு நேர் மோதிய காட்சி அங்குள்ள சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.