ஈராக்கில் டிக்டாக் பெண் பிரபலம் மர்ம நபரால் சுட்டுக்கொலை.. வைரலான வீடியோ
ஈராக்கில் பிரபல டிக்டாக் பிரபலம் மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஈராக் நாட்டின் கிழக்கு பாக்தாத் நகரில் ஜோயூனா மாவட்டத்தைச் சேர்ந்தவர் குப்ரான் சவாதி. இவர் ஓம் பகத் என்ற பெயரில் டிக்டாக்கில் வீடியோ வெளியிட்டு வந்திருக்கிறார். இவரை 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் டிக்டாக்கில் பின்பற்றுகின்றனர்.
இந்த நிலையில், குப்ரான் சவாதி என்ற இயற்பெயர் கொண்ட ஓம் பகத், அவரது வீட்டிற்கு அருகே காரின் உள்ளே அமர்ந்து இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டு தப்பி ஓடி விட்டார். ரத்த வெள்ளத்தில் அங்கேயே சரிந்து குப்ரான் சவாதி துடிதுடித்து உயிரிழந்தார்.
ஈராக் பாதுகாப்பு அமைச்சகம் ஏஎப்பி செய்தி நிறுவனத்திடம், தாக்குதல் நடத்தியவர் உணவு விநியோகம் செய்வது போல் நடித்ததாகத் தெரிகிறது எனத் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், இந்த தாக்குதலில் மற்றொரு பெண் காயமடைந்ததாக அமெரிக்காவிற்கு சொந்தமான அல் ஹுரா என்ற செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஈராக் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட ஒரு அறிக்கையில், சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமான பெண் குப்ரான் சவாதி. இவர் மர்ம நபரால் சுட்டு கொல்லப்பட்டுள்ளார். இவரது மரணம் குறித்து விசாரிக்க சிறப்பு குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.
Iraqi social media star ‘Influencer’ Om Fahad was assassinated yesterday by Iranian militias of the Hashd Al Shaabi (PMF) today in Baghdad (Iraq)
— Cyprian, Is Nyakundi (@C_NyaKundiH) April 27, 2024
She didn’t engage in politics or similar but was often attacked by these factions for her ‚liberal lifestyle‘ pic.twitter.com/BgfOBK7pMr
நாட்டின் கலாசாரத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் டிக்டாக் மூலம் வீடியோக்களை பதிவேற்றிய குற்றச்சாட்டின் பேரில் குப்ரான் சவாதிற்கு கடந்த ஆண்டு ஈராக் நீதிமன்றம் 6 மாத சிறைத் தண்டனை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.