சொன்னதைச் செய்தார்! திருக்குறள் 3.0 தந்த எழுத்தாளர் தமிழ்க்காரிக்கு அமெரிக்காவில் பாராட்டு!!
குறுங்கவிதைகளுடன் வெளி வந்துள்ள திருக்குறள் 3.0 புத்தகத்தை எழுதிய எழுத்தாளர் தமிழ்க்காரியை. அமெரிக்காவில் செயல்பட்டு வரும் சாஸ்தா தமிழ் அறக்கட்டளை விழாவில் பாராட்டி வாழ்த்தியுள்ளனர்.
1330 திருக்குறள்களுக்கும் முழுமையாக உரை எழுதிய முதல் பெண் உரையாசிரியர் என்ற சாதனையைப் படைத்துள்ளார் எழுத்தாளர் தமிழ்க்காரி என்ற முனைவர் சித்ரா மகேஷ். ஒவ்வொரு குறளுக்கும் எளிய உரையுடன், மூன்று வரி கவிதைகளையும் எழுதியுள்ளார். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட 500க்கும் மேற்பட்ட் வண்ணப்படங்களுடன் திருக்குறள் 3.0 என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் புத்தகத்தை சுப.வீரபாண்டியன் சென்னையில் வெளியிட்டார்.
அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் செயல்பட்டு வரும் ப்ளேனோ தமிழ்ப்பள்ளியைச் சார்ந்த சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் நிதி திரட்டும் ஆண்டு விழா நடைபெற்றது. 1 லட்சத்து 5 ஆயிரம் டாலர்கள் திரட்டப்பட்டு, தமிழ்நாட்டின் உதவும் கரங்கள், அமெரிக்காவின் நார்த் டெக்சாஸ் உணவு வங்கி உள்ளிட்ட அமைப்புகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.
இந்த விழாவில் திருக்குறள் 3.0 புத்தகம் எழுதி சாதனை படைத்த தமிழ்க்காரிக்கு சிறப்பு செய்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். தமிழ்க்காரி என்ற முனைவர் சித்ரா மகேஷ் ப்ளேனோ தமிழ்ப்பள்ளியில் பெற்றோராக, ஆசிரியராக , தன்னார்வலராக, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக தன்னார்வப் பணியாற்றி, திருக்குறள் போட்டியில் 1330 திருக்குறள்களையும் சொல்லி சாதனை படைத்தது உள்ளிட்டவைகளையும் நினைவு கூர்ந்ததுடன், திருக்குறள் 3.0 புத்தகம் அமெரிக்காவில் தமிழ் பயிலும் மாணவர்களுக்கு பேருதவியாக இருக்கும் என்று கூறி பாராட்டிப் பேசினார் விசாலாட்சி வேலு.
திருக்குறள் போட்டியில் பங்கேற்று 1330 குறள்களையும் சொல்லி குறளரசி என பட்டம் பெற்ற விழா மேடையிலேயே, குழந்தைகளுக்கு புரியும் வகையில் எளிமையான உரை எழுதுவேன் என்று தெரிவித்தார். அன்று சொன்னதை இன்று செய்து முடித்துள்ளார் என்றும் புகழாரம் சூட்டினார் விசாலாட்சி வேலு.
தொடர்ந்து பேசிய வேலுராமன், இந்தக்கால இளைஞர்களுக்கு அனிருத் இசையின் பாடல்கள் பிடித்துப் போயுள்ளது போல, இளைஞர்களுக்கு திருக்குறள்கள் எளிதில் மனதைக் கவரும் வகையில் அமைந்துள்ளது திருக்குறள் 3.0 புத்தகம் என்று பாராட்டினார்.
ப்ளேனோ தமிழ்ப்பள்ளி நூலகத்திற்கு க்கு திருக்குறள் 3.0 புத்தகத்தை நூலக நிர்வாகிகள் வெங்கடேசன் எல்லப்பன் மற்றும் கவிதா வெங்கடேசனிடம் வழங்கினார் எழுத்தாளார் தமிழ்க்காரி.
பிகில் படத்தின் சிங்கப்பெண்ணே பாடல் பின்னணியில் ஒலிக்க மேடைக்கு அழைக்கப்பட்ட போது, விழாவில் பங்கேற்ற பார்வையாளர்கள் அரங்கம் அதிரும் பெரும் கரகோஷத்துடன், ஆர்ப்பரித்து மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.
சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் நிறுவனர்கள் வேலு ராமன் மற்றும் விசாலாட்சி வேலு தம்பதியினரின் முயற்சியில் உலகில் முதன் முதலாக அமெரிக்காவில் தொடங்கப்பட்ட ”ஒரு டாலர் ஒரு குறள்” பரிசுத் திட்டத்தின் திருக்குறள் போட்டி 16 ஆண்டுகளைக் கடந்து வெற்றி நடைபோட்டுக் கொண்டிருக்கிறது என்பது முக்கியமானதாகும்