இந்தியாவுடன் ஒரே ஒரு பிரச்சனை தான்! அதிபர் ட்ரம்ப் சொல்வது என்ன?

ஜனவரி மாதம் அமெரிக்க அதிபராக 2ம் தடவையாக பதவியேற்ற பிறகு அதிபர் ட்ரம்ப் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்துவருகிறார். சட்டப்பூர்வமற்ற முறையில் அமெரிக்காவில் வசிப்பவர்களை நாடு கடத்துவது, கனடா, மெக்சிகோ, சீனப் பொருட்களுக்கு கூடுதல் வரிவிதிப்பது என பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு வரும் பொருட்கள் மீதும் கூடுதல் வரி விதிக்கப்படும் என்றும் அறிவித்து இருந்தார்.
இந்நிலையில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அமெரிக்க-இந்திய உறவு குறித்த கேள்விக்கு "இந்தியாவுடன் மிகச்சிறந்த நட்புறவு உள்ளது. ஆனால், ஒரே பிரச்சினை என்னவென்றால் உலகிலேயே அதிக வரிவிதிக்கும் நாடாக இந்தியா உள்ளது. அவர்கள் அநேகமாக அமெரிக்க பொருட்களின் மீதான வரியை குறைப்பார்கள் என்று நம்புகிறேன். ஆனால், ஏப்ரல் 2 அன்று இந்தியா எங்களிடம் வசூலிக்கும் அதே வரியை நாங்கள் திரும்பவும் அவர்களிடமிருந்து வசூலிப்போம்" என்று கூறியுள்ளார் ட்ரம்ப்.
முன்னதாக, இந்தியாவில் தங்களது பொருட்களை விற்பது கடினமாக உள்ளதாகவும், அமெரிக்க பொருட்களின் மீது விதிக்கப்படும் வரியை இந்தியா குறைக்க ஒப்புக்கொண்டதாகவும் ட்ரம்ப் தெரிவித்திருந்தார். ஆனால், இதுதொடர்பாக நாடாளுமன்ற குழுவிடம் பேச்சுவார்த்தை தொடர்ந்து வருவதாகவும், அமெரிக்காவின் பொருட்களுக்கு வரியை குறைப்பது குறித்து இதுவரை எந்த உடன்பாடும் ஏற்படவில்லை என்று வர்த்தகச் செயலர் சுனில் பார்த்வால் ஏற்கெனவே இந்த விவகாரத்தில் விளக்கமளித்துள்ளார்.
இந்தியா அமெரிக்கப் பொருட்கள் மீதான வரியை குறைக்காத பட்சத்தில் ஏப்ரல் 2ம் தேதி முதல் இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா கூடுதல் வரி வசூலிக்கும் என்று தெரிகிறது.