அமெரிக்காவில் உடைமைகள் திருட்டு.. மேல்படிப்பு படிக்க சென்ற இளம்பெண் தெருக்களில் சுற்றித்திரியும் அவலம்!!

 
Syeda Lulu Minhaj Zaidi

அமெரிக்காவில் மேல்படிப்பு படிக்க ஐதராபாத்தில் இருந்து சென்ற இளம்பெண் சிகாகோ நகர தெருக்களில் சுற்றி திரியும் செய்தியை கேட்ட தாய், அவரை மீட்டுதருமாறு கேட்டுள்ளார்.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் மவுலா அலி பகுதியைச் சேர்ந்த இளம்பெண் சையிடா லுலு மினாஜ் ஜைதி. அவர் அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தின் டெட்ராய்டு நகரில் உள்ள டிரைன் பல்கலை கழகத்திற்கு முதுநிலை படிப்புக்காக சென்றுள்ளார்.

இந்த நிலையில், இரண்டு மாதங்களாக அவரது தாயார் சையிடா வகாஜ் பாத்திமாவால் மகளை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால், அதிக கவலையில் இருந்த பாத்திமாவுக்கு பெரும் அதிர்ச்சி தகவல் கிடைத்தது.

Syeda Lulu Minhaj Zaidi

ஐதராபாத்தை சேர்ந்த 2 இளைஞர்கள், பாத்திமாவை தொடர்பு கொண்டு, உங்களுடைய மகள் ஜைதி மனஅழுத்தத்தில் உள்ளார். அவரது உடைமைகளை யாரோ சிலர் திருடி சென்று விட்டனர். இதனால், உணவு வாங்க கூட பணம் இன்றி பசியால் வாடி வருகிறார். சிகாகோ நகர தெருக்களில் அவர் சுற்றி திரிகிறார் என கூறியுள்ளனர்.

இதுகுறித்து ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ள அவர், தனது மகளை மீட்டு இந்தியாவுக்கு அழைத்து வரும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனை பாரத் ராஷ்டிர சமிதி தலைவர் காலீகுர் ரகுமான் தனது ட்விட்டரில் பகிர்ந்து உள்ளார்.


அந்த பெண்ணின் தாயார் எழுதிய கடிதத்தில், “தெலுங்கானாவில் உள்ள மவுலா அலியில் வசிக்கும் எனது மகள் சையதா லுலு மின்ஹாஜ் ஜைதி, ஆகஸ்ட் 2021-ல் அமெரிக்காவின் டெட்ராய்டில் உள்ள டிரைன் பல்கலைக்கழகத்தில் தகவல் அறிவியலில் முதுகலைப் படிப்பதற்காகச் சென்று அடிக்கடி எங்களுடன் தொடர்பு கொண்டிருந்தார். கடந்த இரண்டு மாதங்களாக, அவள் என்னுடன் தொடர்பு கொள்ளவில்லை, சமீபத்தில் இரண்டு ஹைதராபாத் இளைஞர்கள் மூலம் என் மகள் மன அழுத்தத்தில் இருப்பதையும், அவளது பொருட்களை யாரோ திருடிச் சென்றதையும் நாங்கள் அறிந்தோம். அமெரிக்காவின் சிகாகோ சாலைகளில் என் மகள் காணப்பட்டாள்.

இந்திய தூதரகம், வாஷிங்டன் டிசி, அமெரிக்கா மற்றும் சிகாகோ அமெரிக்காவில் உள்ள இந்திய துணைத் தூதரகம் உடனடியாக தலையிட்டு எனது மகளை விரைவில் இந்தியாவுக்கு அழைத்து வருமாறு கேட்டுக்கொள்கிறேன். இது தொடர்பாக எடுக்கப்பட்ட தேவையான நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கப்படலாம்” என்று தெரிவித்துள்ளார்.

From around the web