பகீர் வீடியோ.. ரஷ்ய ராணுவ விமானம் விபத்து.. 65 உக்ரைன் போர் கைதிகள் உள்பட 74 சம்பவ இடத்திலேயே பலி!
ரஷ்யாவில் உக்ரைன் கைதிகளை ஏற்றி சென்ற இலியுஷின்-76 விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் 65 போர் கைதி உள்பட 74 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உக்ரைன் நேட்டோ அமைப்பில் சேர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா, கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ம் தேதி ராணுவ நடவடிக்கையை அறிவித்தது. ஏறத்தாழ 2 ஆண்டுகளை போர் நெருங்கிய நிலையில், இரு தரப்பிலும் கடும் சேத விளைவுகள் ஏற்பட்டு உள்ளன. போரில் இரு நாட்டைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள், ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
தொடக்கத்தில் போரில் உக்ரைன் சற்று பின் தங்கியிருந்தாலும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் உதவியுடன் தற்போது வரை தாக்குப்பிடித்து பதிலடி கொடுத்து வருகிறது. இந்த போரால் உலகளவில் பெரும் பொருளாதார இழப்புகள் ஏற்பட்டு உள்ளது. இருப்பினும் போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் ஈடுபட இரண்டு நாடுகளும் முரண்டு பிடித்து வருகின்றனர்.
இந்த நிலையில், உக்ரைன் நாட்டின் சிறை கைதிகளை ஏற்றி கொண்டு ரஷ்ய ராணுவ போக்குவரத்து விமானம் ஒன்று இன்று காலை புறப்பட்டது. 65 போர் கைதிகள், 6 விமான ஊழியர்கள் மற்றும் 3 பேரை சுமந்தபடி சென்ற அந்த விமானம் பெல்கரோடு பகுதியில் திடீரென விபத்தில் சிக்கியது.
இந்த விபத்து எதனால் ஏற்பட்டது? என்பதற்கான காரணம் உடனடியாக தெரிய வரவில்லை. விமான விபத்து பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறப்பு ராணுவ ஆணையமும் அந்த பகுதிக்கு சென்றுள்ளது என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
⚡️An Ilyushin Il-76 military plane reportedly crashed in the #Belgorod region of Russia, as reported by Russian Telegram channels.
— KyivPost (@KyivPost) January 24, 2024
There is no official information about the incident yet. pic.twitter.com/N2IdHdGfQZ
இந்நிலையில், விபத்தில் சிக்கிய 65 பேரும் பலியாகி உள்ளனர். இதனை ரஷியாவின் பெல்கரோடு பகுதி கவர்னர் கிளாட்கோவ் உறுதிப்படுத்தி உள்ளார். உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா போர் தொடுத்ததில் இருந்து, உக்ரைனுக்கு ஆதரவாக இதுவரை, ரூ.54 ஆயிரத்து 199 கோடி மதிப்பிலான ராணுவ தளவாடங்களை ஜெர்மனி அனுப்பி உள்ளது.
இதேபோன்று, அமெரிக்காவும் உக்ரைனுக்கு ஆதரவளித்து வருகிறது. நிதி மற்றும் ராணுவ உதவிகளையும் வழங்கி வருகிறது. உக்ரைனுக்கு ராணுவ உதவிகள் தொடர்ந்து வழங்கப்படும் என உக்ரைனின் கூட்டணி நாடுகள் உறுதி அளித்து உள்ளன. இதனால், ஒன்றரை ஆண்டுகளுக்கும் கூடுதலாக முடிவுக்கு வராமல் போரானது நீடித்து வருகிறது.