பிரேசிலை புரட்டிப்போட்ட புயல்.. வெளுத்து வாங்கிய கனமழை.. வெள்ளத்தில் சிக்கி 31 பேர் பலி!

 
Brazil

தெற்கு பிரேசிலில் புயல் தாக்கியதாலும், கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாகவும் 31 பேர் உயிரிழந்துள்ளனர்.

தென் அமெரிக்க நாடான பிரேசிலில் கடந்த திங்கள்கிழமை (செப். 4) இரவு பெரும் புயல் ஒன்று தாக்கியது. இதனால் அந்நாட்டின் தெற்கு பகுதிகளில் உள்ள மாகாணங்கள் புயலால் அதிகம் பாதிக்கப்பட்டன. புயலால் பெய்த கனமழை காரணமாக ஆறுகளில் நீர் வரத்து அதிகரித்து நகரின் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

Brazil

கடும் வெள்ளத்தில் சிக்கிய மியூகம் நகரின் பல அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்து தரைமட்டமாகின. அங்கு ஒரே வீட்டில் 15 பேரின் உடல்களை மீட்புப் படை வீரர்கள் மீட்டு உள்ளனர். இது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், பிரேசிலை தாக்கிய புயலால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். புயலில் வீடுகள் அடித்து செல்லப்பட்டதால் 2,300 பேர்களின் வாழ்வாதாரம் கேள்வி குறியாகி உள்ளது. நகரின் ஆற்றில் மணிக்கு 2 மீட்டர் வீதம் நீர் அதிகரித்து வருவதால் மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


இதனிடையே இன்று (செப். 7) முதல் மேலும் மழை பெய்வதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், மேலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள மக்கள் இதனால் மேலும் கலக்கமடைந்துள்ளனர்.

From around the web