ஆளுநர் சுட்டுக்கொலை... பிலிப்பைன்ஸ் நாட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!! வெளியான சிசிடிவி வீடியோ

 
Roel Degamo

பிலிப்பைன்ஸ் நாட்டின் நெக்ரோஸ் ஓரியன்டல் மாகாண ஆளுநர் ரோயல் டெகாமோ மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்கிழக்காசியாவின் இறைமையுள்ள ஒரு தீவு நாடான பிலிப்பைன்ஸ், மேற்கு பசிபிக் பெருங்கடலின் எல்லையில் அமைந்துள்ளது. லூசோன், விசயாஸ் மற்றும் மின்டனாவு எனப் பொதுவாக மூன்று முக்கியப் புவியியல் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ள பிலிப்பீன்ஸ் நாடு 7,641 தீவுகளைக் கொண்டுள்ளது.

Roel Degamo

இந்த நாட்டின் மத்திய விசயாஸ் பகுதியை சேர்ந்த நெக்ரோஸ் ஓரியன்டல் மாகாணம் அரசியல் வன்முறைகள் அதிகம் நடக்கும் பகுதியாகும். இதன் ஆளுநராக  ரோயல் டெகாமோ பதவி வகித்து வந்தார். இவர் பாம்ப்லோனா நகரில் உள்ள தனது வீட்டில் கிராம மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிக் கொண்டிருந்தார். 

அப்போது அங்கு வாகனங்களில் வந்த ஒரே மாதிரி சீருடை அணிந்திருந்த மர்ம நபர்கள் ரோயல் டெகாமோ மற்றும் அங்கிருந்த பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் பலத்த காயமடைந்த ரோயல் டெகாமோ சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 4 பேர் கொல்லப்பட்டனர். காயமடைந்த பொதுமக்கள் சிலர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 


தப்பியோடிய குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். இந்த கொடூர தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பிலிப்பைன்ஸ் அதிபர் பெர்டினன்ட் பாங்பாங் மார்கோஸ், “இந்த கொடூர செயலை செய்தவர்களை கண்டுபிடித்து நீதியின் முன் நிறுத்தும் வரை நான் ஓய மாட்டேன்” என்று தெரிவித்துள்ளார். பொது நிகழ்ச்சியின்போது ஆளுநர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பிலிப்பைன்சில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

From around the web