உலகின் 2வது பெரிய கோவில்.. அமெரிக்காவில் அக்ஷர்தாம் இந்து கோவில் திறப்பு.!
அமெரிக்காவில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள உலகின் 2வது மிகப்பெரிய அக்ஷர்தாம் கோவில் திறக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தின் ராபின்சுவில் பகுதியில் 183 ஏக்கர் பரப்பளவில், புது டெல்லியில் இருப்பதை போன்ற மிகப்பெரிய பிரமாண்டமான பாப்ஸ் சுவாமி நாராயண் அக்ஷர்தாம் கோவில் திறக்கப்பட்டுள்ளது. அக்ஷர்தாம் என்றால் இறைவனின் புனிதமான இருப்பிடம் என பொருள்படும்.
பரப்பளவில் கம்போடியாவின் அங்கோர்வாட் கோவிலுக்கு அடுத்தப்படியாக உள்ளதால், இக்கோவில் உலகின் 2வது மிகப்பெரிய இந்து கோவில் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
கடந்த 2011-ம் ஆண்டு துவங்கப்பட்ட இக்கோவிலின் கட்டுமானப்பணியானது, தற்போது வரை அமெரிக்கா முழுவதிலும் இருந்து 12 ஆயிரதிற்கும் மேற்பட்ட தன்னார்வலர்களால் தொண்டு வழங்கப்பட்டு கட்டப்பட்டு உள்ளது. கட்டுமானத்தில் சுண்ணாம்பு, இளஞ்சிவப்பு மணற்கல், பளிங்கு மற்றும் கிரனைட் உள்ளிட்ட கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த கோவில் வளாகத்தில் 10 ஆயிரம் சாமி சிலைகள், 1 பெரிய கோவில் மற்றும் 12 துணைக் கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. மேலும் 1,000 ஆண்டுகள் தாங்கும் வகையில் மிகப்பெரிய நீள்வட்ட குவிமாடம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. வருகிற 18-ம் தேதி (புதன்கிழமை) இது பக்தர்களின் தரிசனத்திற்காக திறக்கப்படுவதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.