கொள்ளை அடித்து விட்டு மன்னிப்பு கேட்ட கொள்ளையன்.. இன்ஸ்டா ஐடியை பகிர்ந்து கொண்ட சுவாரஸ்ய சம்பவம்!

 
Robbery

அமெரிக்காவில் வழிப்பறி கொள்ளையின்போது சம்பவத்தோடு தொடர்புடைய குற்றவாளியும் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட நபரும் இன்ஸ்டாகிராம் ஐடியை பகிர்ந்து கொண்ட வினோத சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் மான்ஹாட்டன் கடற்கரை அருகே உள்ள ரோஸ்கிரான்ஸ் அவென்யூ வழியாக நபர் ஒருவர் நடந்து சென்றுள்ளார். அவரை வழிமறித்த மர்ம நபர் ஒருவர், துப்பாக்கியை காட்டி பணம் தரும்படி மிரட்டியுள்ளார். அதற்கு அந்த நபர் தன்னிடம் வெறும் செல்போனும் ஏடிஎம் கார்டு மட்டும்தான் இருக்கிறது என கூறியுள்ளார்.

உடனே சற்றும் மனம் தளராக வந்த வழிப்பறிக் கொள்ளையன், பாதிக்கப்பட்ட அந்த நபரை தனது காரில் ஏற்றிக் கொண்டு அருகில் உள்ள ஏடிஎம் மையத்திற்கு சென்று அங்கிருந்து பணம் எடுத்து தருமாறு கூறியுள்ளான். அவ்வாறே பாதிக்கப்பட்ட நபர் தனது ஏடிஎம் கார்டில் இருந்து பணத்தை எடுத்துக் கொடுத்ததும், அந்த வழிப்பறிக் கொள்ளையன் எங்கு பாதிக்கப்பட்ட நபரை சந்தித்தாரோ அங்கேயே மீண்டும் மிகவும் பாதுகாப்பாக தனது காரிலேயே கொண்டு போய் சேர்த்துள்ளார்.

Instagram

பாதிக்கப்பட்ட நபர் அங்கிருந்து கிளம்பி செல்வதற்கு முன் குற்றவாளி அவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். அவரது போன் மற்றும் பணத்தை எடுத்துக்கொண்ட கொள்ளையன் அவரிடம் மன்னிப்பு கேட்டது மட்டுமின்றி, தான் கொள்ளையடித்ததற்கான காரணத்தையும் கூறி வருந்தியுள்ளார். தான் செலுத்த வேண்டிய கட்டணங்கள் நிறைய இருப்பதாகவும், அதற்காகவே கொள்ளையில் ஈடுபட்டதாகவும் கூறியதோடு அவரது செல்போனை நாளை திருப்பி அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

உடனே பாதிக்கப்பட்டவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஐடியை வழிப்பறிக் கொள்ளையனிடம் கொடுத்து இருவரும் தொடர்பில் இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இதன்பிறகு குற்றவாளி தனது காரில் கிளம்பி சென்று விட்டார் என்று அந்த பகுதி போலீசார் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

Manhattan Beach Police

இதனையடுத்து அங்குள்ள அதிகாரிகள் சந்தேகத்திற்குரிய அந்த வழிப்பறிக் கொள்ளையனின் இருப்பிடத்தை கண்டறிந்து அவனை கைது செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். கிட்டத்தட்ட 20 வயது இருக்கலாம் என்று நம்பப்பட்ட அந்த குற்றவாளி 5 அடி மற்றும் 8 அங்குல உயரமும், 160 பவுண்டு எடையையும் கொண்டிருக்கலாம் என காவல்துறை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் வழிப்பறிக் கொள்ளையன் நான்கு கதவுகள் கொண்ட அடர் நிற செடான் வகை காரில் சம்பவ இடத்திலிருந்து கிளம்பி சென்றதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் கடந்த 2-ம் தேதி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

From around the web