புதை மண்ணில் சிக்கி தவித்த இளம்பெண்.. 3 நாட்களுக்கு பத்திரமாக மீட்ட மீட்புக்குழு!
அமெரிக்காவில் புதை மண்ணில் 3 நாட்களாக சிக்கி இருந்த இளம்பெண்ணை போலீசார் பத்திரமாக மீட்டுயுள்ளனர்.
அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாகாணத்தின் ஸ்டோட்டன் பகுதியைச் சேர்ந்தவர் எம்மா டெட்யூஸ்கி (31). இவர், கடந்த மாதம் 26-ம் தேதி காணாமல் போய் இருந்த நிலையில், பார்டர்லேண்ட் ஸ்டேட் பூங்காவில் உள்ள சதுப்பு நிலப்பகுதியில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார் என மாசசூசெட்ஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட பகுதிக்கு அருகில் அமைந்துள்ள தென்கிழக்கு நடைபாதையில் மலையேறுபவர்கள் நடந்து கொண்டிருந்த போது கேட்ட அலறல் சத்தத்தை தொடர்ந்து, அவர்கள் திங்கட்கிழமை (ஜூலை 3) போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அலறல் சத்தத்தை பின் தொடர்ந்து சென்ற மீட்புக் குழு இறுதியில் புதை மண்ணில் சிக்கி இருந்த இளம்பெண்ணை பத்திரமாக வெளியே எடுத்தனர்.
அத்துடன் அவர் உயிருக்கு ஆபத்து இல்லாத காயங்களுடன் உடனடியாக ப்ரோக்டனில் உள்ள குட் சமாரியன் மருத்துமவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மீட்கப்பட்ட இளம்பெண் கிட்டத்தட்ட 3 நாட்களாக இந்த புதை மண்ணில் சிக்கி இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மீட்பு நடவடிக்கை தொடர்பாக போலீசார் வெளியிட்டுள்ள தகவலில், மக்கள் கடைசி வரை அவள் பாதுகாப்பாக மீட்கப்படுவார் என்ற நம்பிக்கையை இழக்கவில்லை, பொதுமக்களின் உதவி இல்லையென்றால் அவர் கண்டுபிடிக்கப்பட்டு இருக்க மாட்டார் என தெரிவித்துள்ளது. காணாமல் போன எம்மா டெட்யூஸ்கி இறுதியாக வீட்டுக்கு அருகே பார்க்கப்பட்டுள்ளார். அவர் தன்னுடைய வீட்டை விட்டு காணாமல் போகும் போது அவருடைய போனை எடுத்து செல்லவில்லை என்று தெரிவித்துள்ளனர்.