14 வயது சிறுவனை என்கவுண்டர் செய்த போலீசார்.. அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்! பரபரப்பு வீடியோ
அமெரிக்காவில் 14 வயது ஆப்பிரிக்க-அமெரிக்க சிறுவனை போலீசார் என்கவுண்டர் செய்யும் பரபரப்பான வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் ஜோர்டெல் ரிச்சர்ட்சன் என்ற 14 வயது ஆப்பிரிக்க - அமெரிக்க சிறுவன் கடையில் பொருட்களைத் திருடியதாக குற்றம் சாட்டப்பட்டு போலீசார் சிறுவனை விரட்டியுள்ளனர். போலீசார் நிற்க சொல்லியும் நிற்காமல் ஓடிய சிறுவனை ஒருவழியாக ஜேம்ஸ் என்ற காவலர் மடக்கிப் பிடித்து தரையில் படுக்க வைத்து அழுத்தியுள்ளார். வலி தாங்க முடியாத சிறுவன், காவலரிடம் கெஞ்சியுள்ளான்.
ஆனால், அடுத்து வந்த குருஸ்ஸெக்கா என்ற காவலர், சிறுவனை வயிற்றில் துப்பாக்கியால் சுட்டுள்ளார். ரத்த வெள்ளத்தில் சிறுவன் மயக்கமுற்ற நிலையில், உடனடியாக சிறுவன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சிறுவன் துப்பாக்கி வைத்திருந்ததாக கண்டறியப்பட்ட நிலையில், அது 9mm கைத்துப்பாக்கியைப் போல் தோற்றமளிக்கும் ஆபத்தில்லாத பெல்லட் துப்பாக்கி என்பது பிறகு தெரிய வந்தது. அதை வைத்து சிறுவன் காவலர்களை அச்சுறுத்தியதாகத் தெரியவில்லை.
WARNING: GRAPHIC CONTENT - Police in Aurora, Colorado, released body camera footage following the death of Jor'Dell Richardson, a teenager who was shot by an officer after an alleged robbery https://t.co/6xpBU0G5AO pic.twitter.com/Msqqa0ZAJg
— Reuters (@Reuters) June 12, 2023
சிறுவனின் மரண சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், காவலரின் ஆடையில் பொருத்தப்பட்டிருந்த கேமரா மூலம் பதிவான சிறுவன் என்கவுண்டர் செய்யப்படும் வீடியோ வெளியாகியுள்ளது.