கோமாவுக்கு சென்ற தாய்.. குழந்தை விற்பனை.. 19 ஆண்டுகளுக்கு பின் சந்தித்துக்கொண்ட ட்வின்ஸ்!

 
twins

பிறக்கும்போது பிரிக்கப்படும் இரட்டை சகோதரிகள், 19 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இணைவது போன்ற ஒரு சம்பவம் நிஜத்தில் நிகழ்ந்துள்ளது.

ஜார்ஜியா நாட்டில் வாழ்ந்து வரும் அனோ சர்தானியா எனும் இளம்பெண்ணின் தோழிகள், அவரிடம், தலைமுடியின் நிறத்தை மாற்றிக்கொண்டு டிக் டாக்கில் நடன வீடியோக்கள் போடுவது நீதானே என்று கேட்டு இருக்கிறார்கள். நமக்கும் நடனத்துக்கும் காத தூரமாயிற்றே என அனோ கூற, அவருக்கு சில வீடியோக்களை அவரது தோழிகள் ஃபார்வேர்ட் செய்திருக்கிறார்கள். பார்த்தால், வீடியோவில் இருக்கும் பெண் அப்படியே அனோவைப் போல் இருக்கிறார்.

யார் அந்த பெண் என்று விசாரித்து ஒருவழியாக அவரைக் கண்டுபிடித்துவிட்டார் அனோ. விசாரித்ததில் அவர் பெயர் எமி க்விடியா என்பதும், அவர் தனது சகோதரி என்பதும், தாங்கள் இருவரும் இரட்டைக் குழந்தைகள் என்பது தெரியவந்துள்ளது. உண்மை என்னவென்றால், ஜார்ஜியா நாட்டில், குழந்தைகளை அவற்றின் பெற்றோரிடமிருந்து பிரித்து சட்டவிரோதமாக தத்துக்கொடுக்கும் கும்பல்கள் சர்வசாதாரணமாம்.

Twins

பிரசவத்துக்குச் செல்லும் தாய்மார்களிடம், பிள்ளை இறந்தே பிறந்தது என்று பொய் சொல்லிவிட்டு, செவிலியர்கள் சிலர் கூட பிள்ளைகளை கருப்புச் சந்தையில் விற்றுவிடும் அநியாயமும் நடக்கிறதாம். அவ்வகையில், ஆசா ஷோனி என்னும் பெண் பிரசவத்துக்குச் செல்ல, பிரசவித்ததும் அவரது உடல் நலம் பாதிக்கப்பட, கோமாவுக்கே சென்றுள்ளார்.

அவரது பிள்ளைகள் இறந்தே பிறந்ததாக பொய் சொல்லி ஏமாற்றி, அவரது இரட்டைப் பிள்ளைகளை கருப்புச் சந்தையில் விற்கும்படி கோச்சா ககாரியா என்னும் நபரிடம் கொடுத்திருக்கிறார்கள். அந்த கோச்சா ககாரியா வேறு யாருமில்லை, அசாவின் கணவர்தான். தன் மகள்கள் என தெரியாமலே தன் பிள்ளைகளை விற்றிருக்கிறார்.

twins

அனோவும் எமியும் வெவ்வேறு பெற்றோர்களுக்கு தத்துக்கொடுக்கப்பட்ட நிலையில், ஒரே ஊரில் சில மைல் தொலைவு வித்தியாசத்தில்தான் இருவரும் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். பின்னர் என்ன நடந்தது என்பதை அறிவதற்கான முயற்சியில் இருவரும் தீவிரமாக இறங்க, தங்களைப் பெற்ற தாய் ஜெர்மனியில் இருப்பதைத் தெரிந்துகொண்டு ஜெர்மனிக்கே சென்றுவிட்டார்கள் இருவரும்.

அசா, தன் பிள்ளைகள் பிரசவத்திலேயே இறந்துவிட்டதாக எண்ணிக்கொண்டிருந்த நிலையில், 19 ஆண்டுகளுக்குப் பிறகு தன்னைத் தேடி வந்த இளம்பெண்கள் இருவரும் தன் மகள்கள் என தெரியவர, அவர்களைக் கட்டிக்கொண்டு கண்ணீர் விட்டுக் கதறியிருக்கிறார். இந்த சந்திப்பு 2021-ல் நடந்திருந்தாலும், தற்போது பல ஊடகங்களில் இந்த செய்தி வெளியாகிவருவது குறிப்பிடத்தக்கது.

From around the web