உலகின் மிக நீளமான ஓவியம்.. சீனப் பெருஞ்சுவரில் வரைந்து கின்னஸ் சாதனை படைத்த பெண் ஓவியர்!
சீனாவில் உள்ள சீனப் பெருஞ்சுவரின் மேல் உலகின் மிக நீளமான ஓவியத்தை உருவாக்கி பெண் ஓவியர் சாதனை படைத்துள்ளார்.
உலக அதிசயங்களில் ஒன்றாக சீனாவில் வரலாற்று சிறப்புமிக்க சீனப் பெருஞ்சுவர் இன்றளவும் பிரசித்தி பெற்று உள்ளது. இதனை காண ஆண்டுதோறும் சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர். சீனாவின் வடபுலத்தில் உள்ள மங்கோலியா என்னும் நாட்டில் இருந்து நாகரிகம் இல்லாத நாடோடிகள் அடிக்கடி படையெடுத்து வந்தனர். அவர்களைத் தடுத்து நிறுத்துவதற்காக ஏறத்தாழ 2,200 ஆண்டுகளுக்கு முன்பு ஷயுவால்டீ என்ற மன்னன் இந்த நீண்ட சுவரை எழுப்பியதாகக் குறிப்பு உள்ளது.
13-ம் நூற்றாண்டில் மிங் வம்ச காலத்தில் கட்டப்பட்ட சீனப் பெருஞ்சுவரின் 32-வது பகுதி கலாசார நினைவு சின்னங்களில் ஒன்றாக தற்போது உள்ளது. 4 ஆயிரம் மைல்கள் தொலைவில் எழுப்பப்பட்ட இந்த சுவரானது பல நூற்றாண்டுகளாக கட்டப்பட்டு உருவான ஒன்று. கடந்த 1987-ம் ஆண்டு சீனப் பெருஞ்சுவர் ஆனது யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய ஸ்தலங்களில் ஒன்றாக பெயரிடப்பட்டது.
இந்த நிலையில், சீனாவைச் சேர்ந்த குவோ ஃபெங் என்ற பெண் ஓவியர், சீனப் பெருஞ்சுவரின் மேல் உலகின் மிக நீளமான ஓவியத்தை உருவாக்கி சாதனை படைத்துள்ளார். அவரின் இந்த சாதனை கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
சீனப் பெருஞ்சுவரின் மேல் 60 நாட்களுக்கும் மேலாக அமர்ந்து இந்த பிரமிக்க வைக்கும் ஓவியத்தை குவோ ஃபெங் வரைந்துள்ளார். இவர் 1,014 மீட்டர் நீளமுள்ள கேன்வாஸில் ‘காலப்போக்கில் நாகரிகத்தின் வளர்ச்சி’ என்ற கருப்பொருளை மையமாக கொண்டு ஓவியத்தை வரைந்துள்ளார். இதுகுறித்த வீடியோவை கின்னஸ் உலக சாதனை நிறுவனம் தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.