ஜாமீன் வழங்க மறுத்த நீதிபதி.. கோபத்தில் அடிக்க பாய்ந்த குற்றவாளி.. பரபரப்பு வீடியோ!

 
Las Vegas

அமெரிக்காவில் ஜாமீன் இல்லை என்று தீர்ப்பு வழங்கிய நீதிபதியை குற்றவாளி தாக்க முயன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அமெரிக்காவின் நெவாடா மாகாணம் லாஸ் வேகாஸ் நகரை சேர்ந்தவர் டியோப்ரா ரெட்டன் (30). இவர் சமீபத்தில் ஒரு அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்டார். இவர் தாக்கியதில் எதிர்தரப்பைச் சேர்ந்தவர் கடுமையாகப் பாதிக்கப்பட்டார். இதனால் ரெட்டன் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸார் அவரைக் கைது செய்தனர், இந்த வழக்கின் விசாரணை நெவாடா நகர நீதிமன்றத்தில் நடந்தது.

இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி மேரி கே ஹால்தஸ் நேற்று தீர்ப்பு வழங்கினார். முன்னதாக ரெட்டன் குற்றத்தை ஒப்புக்கொண்டதால் அவருக்கு சிறைத் தண்டனை வழங்கும் வகையில் நீதிபதி தனது தீர்ப்பை வாசித்துக் கொண்டிருந்தார்.

Las Vegas

அப்போது ரெட்டன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தனது கட்சிக்காரரை ஜாமீனில் விடுதலை செய்யுமாறு கோரிக்கை வைத்தார். அதை நீதிபதி மேரி மறுத்ததால் கடும் ஆத்திரம் அடைந்த ரெட்டன் கண்ணிமைக்கும் நேரத்தில் நீதிபதியின் இருக்கைக்கு முன்பாக இருந்த மேஜையின் மீது பாய்ந்து அவரை தாக்க முயன்றார்.

இதனால் மேஜையின் மீது இருந்த கொடி, சின்னங்கள் சிதறி கீழே விழுந்தன. இதனை சற்றும் எதிர்பாராத நீதிமன்ற ஊழியர்கள் சுதாரித்துக்கொண்டு ரெட்டனை மடக்கிப் பிடித்தனர். இந்த சம்பவத்தில், 62 வயதான நீதிபதி மேரிக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. ஆனாலும் அவரது உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.


அதே சமயம் நீதிமன்ற பாதுகாவலர்களில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் முழுவதும் நீதிமன்ற கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. இப்போது இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஏற்கெனவே ரெட்டன் மீது அடிதடி வழக்குப் பதிவாகி இருந்த நிலையில் இப்போது கூடுதலாக, நீதிபதியை தாக்க முயன்ற வழக்கும் அவர் மீது பதிவாகியுள்ளது.

From around the web