1000 வருடங்களில் இல்லாத கனமழை.. 10 லட்சம் மக்கள் வெளியேற்றம்.. வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் சீனா!

 
china

சீனாவில் பெய்து வரும் கனமழையால் ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் காரணமாக பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

டோக்சுரி சூறாவளி காரணமாக சீனாவின் பெரும்பான்மையான பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பேய் மழை பெய்து வருகிறது. அதன் விளைவாக அந்நாட்டின் பீஜிங், ஹூபே, தியான்ஜின் மற்றும் கிழக்கு ஷான்சி உள்ளிட்ட வடக்கு மாகாணங்களில் உள்ள பெரும்பாலான நீர்நிலைகள் வேகமாக நிரம்பி, ஊருக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது.

நகரின் சாலைகள், இருப்புப் பாதைகள் என அனைத்து இடங்களும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. இதற்கிடையே, வெள்ள நீரில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டன. இதுவரை, 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அப்பகுதிகளில் இருந்து மீட்கப்பட்டு, தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

china

மழை வெள்ளத்துக்கு இதுவரை 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளதாகவும், பலர் மாயமாகி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  வெள்ள நீர் சூழ்ந்ததால் வீடு மற்றும் உடைமைகளை இழந்து தவிப்போர், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் அளிக்கப்படும் என அந்நாட்டு அரசு உறுதியளித்துள்ளது.

மழை ஒரு பக்கம் சீனாவை புரட்டிப் போடுகிறது என்றால் மறுபக்கம் நிலநடுக்கமும் அந்நாட்டு மக்களை தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. கிழக்கு சீனாவில் ஷாண்டாங் மாகாணத்தின் பிங்குயான் பகுதியை மையமாக வைத்து நேற்று கடுமையான நில நடுக்கம் ஏற்பட்டது. இது, ரிக்டர் அளவில், 5.5 ஆக பதிவானது. இதன் காரணமாக அப்பகுதியில் இருந்த கட்டடங்கள் குலுங்கின.


இதனால், அங்கு வசித்த மக்கள் அலறியடித்தபடி வெளியே ஓடி வந்தனர். அங்குள்ள 126 கட்டடங்கள் இடிந்து விழுந்ததுடன், 21 பேர் காயமடைந்தனர். பீஜிங், தியான்ஜென், ஹெனான், ஹெபெய் உள்ளிட்ட மாகாணங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இப்பகுதிகளில் ரயில் சேவைகளும் தடைபட்டன. மழையும் நில நடுக்கமும் மாறி மாறி சீனாவை மிரட்டி வருவதால் அந்த நாட்டு மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.

From around the web