சொந்தநாட்டுக்கு திருப்பி அனுப்பும் முதல் விமானம் கிளம்பியாச்சு! சொன்னதைச் செய்யும் ட்ரம்ப்!!
அமெரிக்காவில் சட்டபூர்வமற்ற முறையில் எல்லை தாண்டிக் குடியேறியவர்கள் அவர்களுடைய சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என்ற முழக்கத்துடன் தேர்தலை சந்தித்து வெற்றி பெற்று மீண்டும் அதிபர் ஆகியுள்ளார் டொனால்ட் ட்ரம்ப். சொன்னது போல் பதவியேற்ற முதல் நாளே இது தொடர்பான ஆணைகளையும் பிறப்பித்தார்.
மெக்சிகோ எல்லையில் ராணுவப்படையினரும் சேர்ந்து எல்லைப்பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எல்லையில் மெக்சிகோ பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் செய்வதறியாமல் திகைத்து நின்று கொண்டிருக்கின்றனர். அவர்கள் யாரும் அமெரிக்காவுக்குள் வந்துவிடக்கூடாது என்பதில் ட்ரம்ப் அரசு முழுமூச்சாக செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் எல்லை தாண்டி சட்டப்பூர்வமற்ற முறையில் அமெரிக்காவில் நுழைந்தவர்களை அடையாளம் கண்டு சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பும் பணி தொடங்கியுள்ளது. ராணுவ விமானத்தில் நூற்றுக்கணக்கானோர் திருப்பி அனுப்பப்படும் புகைப்படக் காட்சி வெளியாகியுள்ளது. ராணுவ விமானத்தில் பயணிகள் விமானம் போல் வசதிகள் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. அந்தந்த நாடுகள் தங்கள் நாட்டவர்களை திரும்பப் பெறாவிட்டால் பொருளாதாரத் தடை உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ட்ரம்ப் அறிவித்து இருந்தார்.
18 ஆயிரம் இந்தியர்களும் இந்தப் பட்டியலில் உள்ளனர். அவர்களை திரும்பப்பெற்றுக் கொள்வதாக இந்திய அரசுத் தரப்பில் கூறப்பட்டுள்ளது. விரைவில் சட்டப்பூர்வமற்ற முறையில் அமெரிக்காவில் நுழைந்த இந்தியர்களும் திருப்பி அனுப்பப்பட உள்ளனர்.
