இமைநேரத்தில் கண்டங்களைக் கடந்துவிட்ட உணர்வு.. சிகாகோ நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி
தமிழ் மண்ணில் இருப்பதுபோலவே உணர்கிறேன் என்று சிகாகோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உலக நாடுகளில் உள்ள தொழில் நிறுவனங்களை தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை செய்ய வைப்பதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 27-ம் தேதி சென்னையில் இருந்து அமெரிக்காவுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டார். அங்கு பல்வேறு நிறுவனங்களுடன் தொழில் முதலீட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி வருகின்றன. தமிழ்நாட்டுக்கான தொழில் முதலீடுளை ஈா்த்துவிட்டு செப்டம்பர் 14-ம் தேதி திரும்பி வரும் வகையில் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிகாகோவில் நடைபெற்ற வட அமெரிக்க தமிழ்ச்சங்க கலைவிழாவில் பங்கேற்று உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் பட்டு வேட்டி சட்டை அணிந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துக் கொண்டார்.
பின்னர் நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியதாவது, “திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு முன்னேற்றம் அடைந்திருப்பது உங்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும். தமிழ் மண்ணில் இருக்கும் மாதிரியான உணர்வை இந்த நிகழ்ச்சி எனக்கு ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவுக்கு லேட்டாக வந்திருக்கிறேன், ஆனால் வரவேற்பு லேட்டஸ்ட் ஆக உள்ளது. தமிழ்நாட்டுக்குக் குழந்தைகளோடு வாருங்கள். வானுயர்ந்து நிற்கும் வள்ளுவரை காட்டுங்கள். நம்முடைய வரலாற்றின் அடையாளமாக விளங்கும் கீழடி அருங்காட்சியகத்தை காட்டுங்கள். சிவகளை, கொற்கை, பொருநை போன்ற இடங்களுக்கு அழைத்துசெல்லுங்கள்.
இமைநேரத்தில் கண்டங்களைக் கடந்துவிட்ட உணர்வு!
— M.K.Stalin (@mkstalin) September 8, 2024
சிகாகோ நகரில் வெள்ளமெனத் தமிழர் திரண்ட காட்சியில், தமிழினம் மேலெழுந்து வந்த வரலாற்றைக் கண்டேன். கற்ற கல்வியால் - ஒப்பற்ற உழைப்பால் பெற்ற பெருமைகளைத் தாங்கி, அமெரிக்க மண்ணில் தமிழர் தலைநிமிர்ந்து வாழ்தல் கண்டு தமிழ்நாட்டின்… pic.twitter.com/BEueaNpXGN
நான் தமிழ்நாட்டுக்கு திரும்பிய பிறகும், உங்களின் இந்த ஆரவாரம், மகிழ்ச்சியான முகங்கள் என் ஞாபகத்துக்கு வரும். உங்களுக்குள் எந்தப் பிளவுகளும் ஏற்பட அனுமதிக்காதீர்கள். ஒரு தாய் மக்களாக வாழுங்கள், அறிவையும், உழைப்பையும் மட்டும் நம்பி, வாழ்க்கைப் பயணத்தை தொடருங்கள். கிணற்றுத் தவளைகள் அல்ல தமிழர்கள். வானத்தையே வசப்படுத்தும் வானம்பாடிகள் என்பதற்கான பொருள் நீங்கள். திறமையால் தமிழன் தலைநிமிர்ந்து வாழ்வான் என்பதன் அடையாளம் நீங்கள். உங்களில் சிலர் மட்டும்தான் இந்த நாட்டுக்கு விரும்பி வந்திருப்பீர்கள் என பேசினார்.