திடீரென சரிந்து விழுந்த பிரச்சார மேடை.. அலறியடித்து ஓடிய மக்கள்.. குழந்தை உள்பட 9 பேர் பலி.. பரபரப்பு வீடியோ
மெக்சிகோவில் தேர்தல் பிரசார மேடை சரிந்து விழுந்த விபத்தில் ஒரு குழந்தை உள்பட 9 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் வரும் ஜூன் 2-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி, அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அந்நாட்டின் வடக்கு மாகாணமான நியூவோ லியோனில் உள்ள சான் பெட்ரோ கார்சா கார்சியா நகரில் நேற்று பலத்த காற்று வீசியது. அப்போது, குடிமக்கள் இயக்கம் கட்சியின் அதிபர் வேட்பாளராக போட்டியிடும் ஜார்ஜ் அல்வாரெஸ் மைனெசின் பிரசார நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்டிருந்த மேடை அமைப்புகள் சரிந்து விழுந்தன.
இந்த இடிபாடுகளில் சிக்கி ஒரு குழந்தை உள்பட 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 50 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த இடிபாடுகளில் படுகாயம் அடைந்தவர்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்பு குழு மற்றும் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பாக வேட்பாளர் ஜார்ஜ் அல்வாரெஸ் மைனெஸ் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள தகவலில், “இந்த விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். விபத்தில் தனது குழு உறுப்பினர்களும் படுகாயம் அடைந்துள்ளனர். விபத்து நடந்த இடத்துக்கு சென்று கொண்டிருக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
multiple angles of a stage collapse at a political rally in mexico. pic.twitter.com/DNg0y2YW97
— the hardest clips (@thehardestclips) May 23, 2024
நியூவோ லியோன் மாகாண கவர்னர் சாமுவேல் கார்சியா சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ள வீடியோவில் பொதுமக்களிடம் உரையாற்றினார். அதில், அப்பகுதியில் கடுமையான இடியுடன் கூடிய மழை பெய்து வருவதால் குடியிருப்புவாசிகள் வீட்டிற்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தினார். மேலும், சான் பெட்ரோ கார்சா கார்சியாவில் மேடை சரிந்த விபத்தை கவர்னர் சாமுவேல் கார்சியாவும் உறுதிப்படுத்தினார்.