கொடுத்த கடனை கேட்ட நபர் சுட்டுக்கொலை.. இந்தியர்கள் உள்பட 3 பேர் கைது!

 
Florida

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை சேர்ந்த நபர், கடன் கொடுத்த பணத்தை வாங்க சென்ற நிலையில், மூன்று வாரங்களுக்கு பிறகு சடலமாக மீட்கபட்டுள்ளார்.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை சேர்ந்த நபர், கடன் கொடுத்த பணத்தை வாங்க சென்ற நிலையில், 3 வாரங்களுக்கு பிறகு சடலமாக மீட்கபட்டுள்ளார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய இந்தியர்கள் இருவருடன் 3 பேர் கைதாகியுள்ளதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது. புளோரிடா மாகாணத்தை சேர்ந்த சுரேன் சீதல் (36) என்பவரே கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இவர் கடனாக கொடுத்துள்ள 3.15 லட்சம் டாலர் தொகையை திருப்பி வாங்க சென்ற நிலையிலேயே, நவம்பர் 2-ம் தேதி மாயமானார். விமான மெக்கானிக்கான சுரேன் கொலை வழக்கில் தற்போது சோம்ஜீத் சிங் (29), ஆவின் சீதாராம் (24) மற்றும் கவின் ஹண்டர் (18) ஆகிய 3 பேர் கைதாகியுள்ளனர்.

gun

இந்த மூவரில் ஒருவர் தான் சுரேனுக்கு 3.15 லட்சம் டாலர் தொகையை திருப்பித் தரவேண்டும் என்றும் கூறப்படுகிறது. நவம்பர் 2-ம் தேதி வேலைக்கு செல்வதாக கூறி குடியிருப்பில் இருந்து சுரேன் வெளியேறியுள்ளார். ஆனால் அன்றும், அதன் அடுத்த நாளும் அவர் வேலைக்கும் செல்லவில்லை குடியிருப்புக்கும் திரும்பவில்லை.

இந்த நிலையில் பயந்துபோன குடும்பத்தினர், சுரேன் காணாமல் போனதாக கூறி போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். ஆனால் நவம்பர் 21-ம் தேதி சுரேனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அவரது காதலி தெரிவிக்கையில், சோம்ஜீத் சிங் என்பவரே சுரேனுக்கு கடன்பட்டவர் என்றும், அந்த பணத்தை திருப்பி வாங்கும் பொருட்டே சுரேன் முயன்று வந்துள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், சுரேனை கொன்று விட்டு, கடனில் இருந்து தப்பிக்க சிங் தமது நண்பர்கள் இருவருடனும் திட்டமிட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர். முதற்கட்ட விசாரணையில், சுரேன், சிங் மற்றும் சீதாராம் ஆகிய மூவரும் இணைந்து பட்டாசு வியாபாரம் செய்துள்ளனர்.

Florida

மேலும், நவம்பர் 2ம் தேதி சுரேனின் செல்போன் ஆஃப் ஆகும் வரையில் நால்வரும் ஒருவருக்கொருவர் செல்போனில் தொடர்பு கொண்டுள்ளனர். மட்டுமின்றி சுரேனின் சடலம் மீட்கப்பட்ட பகுதிக்கு அருகாமையில் சீதாராமின் செல்போனில் இருந்து அழைப்பு சென்றுள்ளதும் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

இதில் கவின் ஹண்டர் என்பவரே சுரேனை துப்பாக்கியால் சுட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டால், சீதாராம், சிங் மற்றும் ஹண்டர் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படலாம் என்றே கூறப்படுகிறது.

From around the web