750 பேருடன் நடுக்கடலில் கவிழ்ந்த படகு.. 79 பேர் பலி.. 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் கதி குறித்து அச்சம்
தெற்கு கிரீஸில் அகதிகள் வந்த மீன்பிடி படகு திடீரென மூழ்கிய நிலையில், அந்த படகில் பயணம் செய்த 79 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2011-ம் ஆண்டு லிபியாவில் கடாபி ஆட்சி கவிழ்ந்ததில் இருந்தே, அங்கு குழப்பமான சூழல் நிலவுகிறது. அங்கிருக்கும் மக்கள் ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைவது தொடர்கிறது. இவர்களை படகுகளில் சட்டவிரோதமாக அழைத்துச் செல்வதை ஒரு கும்பல் தொழிலாக செய்து வருகிறது.
இந்த நிலையில், கடல்வாயிலாக ஐரோப்பிய நாடுகளுக்கு நுழைய முயன்ற சுமார் 750 அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழந்ந்து கோர விபத்து ஏற்பட்டுள்ளது. கீரிஸ் நாட்டின் தெற்கு பகுதியில் இந்த படகு கவிழந்து விபத்துக்குள்ளானது.
எகிப்தில் இருந்து புறப்பட்ட இந்த படகு லிபியாவில் உள்ள கடற்கரையில் இருந்து அகதிகளை ஏற்றி வந்துள்ளது. இந்த படகில் சுமார் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் இருந்த நிலையில், கடலில் விழுந்த பெரும்பாலானோர் உயிர் பிழைக்க மாட்டார்கள் என அஞ்சப்படுகிறது. இந்த படகு இத்தாலியை நோக்கி சென்றதாகவும் சிரியா, பாகிஸ்தான், எகிப்து ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் எனவும் முதல்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மீட்கப்பட்ட அகதிகளுக்குச் சிகிச்சை அளித்து வந்த மருத்துவர் கூறுகையில், “சிகிச்சையின் போது இந்த சிறு படகில் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இருந்ததாகச் சொன்னார்கள். படகில் கீழ்த் தளத்தில் குழந்தைகளும் பெண்களும் இருந்துள்ளனர். இருப்பினும், அங்கே துல்லியமாக எத்தனை குழந்தைகள் இருந்தனர் என்பது யாருக்கும் தெரியவில்லை. ஒரு சிலர் 50 குழந்தைகள் இருந்ததாகவும் மற்றொரு தரப்பினர் 100 குழந்தைகள் இருந்ததாகவும் கூறுகின்றனர்.
குழந்தைகள் எத்தனை பேர் எனத் துல்லியமாகத் தெரியவில்லை. இந்த விபத்தில் சுமார் 600 பேர் உயிரிழந்திருக்கலாம். ஏனென்றால் என்னிடம் பேசிய அனைவரும் மொத்தம் 750 பேர் இந்த படகில் பயணித்ததாகத் தெரிவித்தனர்” என்று அவர் தெரிவித்தார்.
விபத்தில் சிக்கியவர்களில் இதுவரை 104 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் அனைவரும் ஆண்கள் எனக் கூறப்பட்டுள்ளது. நூற்றக்கணக்கானோரை பலிவாங்கிய இந்த படகு விபத்து பெரும் துயரத்தை அளிப்பதாக கூறிய கிரீஸ் அரசு, நாட்டில் மூன்று நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என தெரிவித்துள்ளது.