அடேங்கப்பா !! கனடா தமிழ் விழாவில் இத்தனை அரசியல் தலைவர்களா?
கனடாவில் நடைபெற்ற 9வது தமிழ்த் திருவிழாவில் தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலவாரியத் தலைவர் கார்த்திகேய சிவசேனாபதி, இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், கனேடிய மத்திய அமைச்சர்கள் கேரி அனந்தசங்கரி, அஹமது ஹுசேன், கனேடிய பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பியர் பொய்லிய்வ்ரே என பெரும் அரசியல் தலைவர்கள் பட்டாளாமே பங்கேற்றுள்ளது கனேடியத் தமிழர்களின் முக்கியத்துவத்தை பறை சாற்றுவதாக அமைந்துள்ளது.
கனடா நாட்டின் ட்ரோண்டோ நகரில் 9வது தமிழ்த் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கனடா மற்றும் அமெரிக்காவிலிருந்து இரண்டரை லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் பங்கேற்றனர். தமிழ்நாட்டிலிருந்து சிறப்பு விருந்தினராக அயலகத் தமிழர் நல வாரியத் தலைவர் கார்த்திகேய சிவசேனாபதி வருகை தந்திருந்தார். இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் விழாவின் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார்.
கனேடிய மத்திய அமைச்சர் கேரி அனந்தசங்கரி, பன்னாட்டு மேம்பாட்டு மத்திய அமைச்சர் அகமது ஹுசேன், கனேடிய பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் பியர் பொய்லிய்வ்ரே(Pierre Poilievre) ட்ரோண்டோ மாநகர மேயர்ஒலிவியா சோவ், ப்ராம்டன் நகர மேயர் பேட்ரிக் ப்ரௌவ்ன்,பிக்கரிங் நகர மேயர் கெவின் ஆஷ் கலந்து கொண்டு விழாவுக்கு சிறப்பு சேர்த்தனர்.
மேலும் கனேடிய பாராளுமன்ற உறுப்பினர்கள் ஷான் சென், சல்மா சஹித் ஒண்டாரியோ மாகாண பாராளுமன்ற உறுப்பினர்கள் லோகன் கணபதி, க்ரஹாம் மெக்க்ராகர், ஆண்ட்ரியா ஹேசல், ட்ரோண்டோ மாநகர துணை மேயர் ஜெனிஃபர் மெக்கெல்வி, மாமன்ற உறுப்பினர் ஜமால் மயர்ஸ், மார்க்கம் நகரமன்ற உறுப்பினர் வனிதா நாதன் வருகை தந்து சிறப்புரை ஆற்றினார்கள்.
மற்றும், அமெரிக்க பொருளாதார அரசியல் வெளியுறவுத் துறை அதிகாரி மைக்கேல் பெண்டன், ட்ரோண்டோ அமெரிக்க தூதரக அதிகாரி சூசன் க்ரிஸ்டல் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
உள்ளூர் தலைவர்கள் முதல் உலகத் தலைவர்கள் மற்றும் அமெரிக்க, கனேடிய அரசு அதிகாரிகள் என 20க்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்ட 9வது தமிழ்த் திருவிழா தமிழர்கள் வரலாற்றில் ஒரு மைல்கல் என்றால் மிகையல்ல.
கட்சி பாகுபாடின்றி அரசியல் தலைவர்களும், அரசு அதிகாரிகளும் தமிழ் விழாவில் கலந்து கொள்வது, கனடாவில் வசிக்கும் தமிழர்களுக்கு பெருமை சேர்ப்பதுடன், தமிழர்களின் அரசியல், பொருளாதார முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதாகவும் உள்ளது.