சிங்கப்பூரின் 9வது அதிபராக பதவியேற்றார் தமிழர் தர்மன் சண்முகரத்னம்..!

 
Tharman Shanmugaratnam

சிங்கப்பூரின் 9வது அதிபராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழர் தர்மன் சண்முகரத்னம் இன்று பதவியேற்றார்.

சிங்கப்பூரில் கடந்த 1-ம் தேதி நடந்த அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளியும், தமிழருமான தர்மன் சண்முகரத்னம் 70.4 சதவீத வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். அவருடன் போட்டியிட்ட சீன வம்சாவளி வேட்பாளர்களான கொக் சாங்க் 15.72 சதவீத வாக்குகளும் கின் லியான் 13.88 சதவீத வாக்குகளும் பெற்றனர்.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில் சிங்கப்பூரின் 9-வது அதிபராக தர்மன் சண்முகரத்னம் பதவியேற்று கொண்டார். அவருக்கு சிங்கப்பூர் சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி சுரேஷ் மேனன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

Tharman Shanmugaratnam

தர்மன் சண்முகரத்னம், கடந்த 1957-ம் ஆண்டு சிங்கப்பூரில் பிறந்தார். இவரது தாத்தா, பாட்டி ஆகியோர் தமிழ்நாட்டிலிருந்து சிங்கப்பூரில் குடியேறியவர்கள். சண்முகரத்னத்தின் தந்தை கனகரத்தினம் மருத்துவத் துறையில் பேராசிரியராக பணியாற்றியவர்.

சண்முகரத்னம், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாக படிப்பில் முதுநிலை பட்டம் பெற்றவர். இவரது மனைவி ஜேன் யுமிகோ இடோகி. முன்னாள் வழக்கறிஞரான இவர் சமூக சேவகியாகவுள்ளார். இவர்களுக்கு ஒரு மகளும், 3 மகன்களும் உள்ளனர்.

TharmanShanmugaratnam

சண்முகரத்னம் கடந்த 1988-ம் ஆண்டு சிங்கப்பூர் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்கத்தின் மூத்த பொருளாதார நிபுணராக நியமிக்கப்பட்டார். சிங்கப்பூர் எம்.பி.யாக இவர் கடந்த 2001ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார். கடந்த 2011ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை இவர் கல்வி, நிதி அமைச்சராகவும், துணை பிரதமராகவும் பணியாற்றியவர்.

From around the web