கிரீஸில் பயங்கர காட்டுத்தீ.. 18 பேர் உடல் கருகி பலியான சோகம்! பகீர் வீடியோ
கிரீஸ் நாட்டில் ஏற்பட்டுள்ள காட்டுதீயில் சிக்கி 18 பேர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிரீஸ் நாட்டில் வேகமாக பரவி வரும் காட்டுத் தீ, தொடர்ந்து வெப்ப அலை மற்றும் பலத்த காற்று வீசுவதால் காட்டுத் தீயின் தாக்கம் 4வது நாளாக நீடிக்கிறது. குறிப்பாக வடக்கு பகுதியில் காட்டுத்தீயின் தாக்கம் அதிகமாக உள்ளது. அப்பகுதியில் வசிக்கும் ஏராளமான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். தீயை கட்டுப்படுத்தும் பணியில் வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு படையினர் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டுள்ள வடமேற்கு ஏவ்ராஸ் பகுதியில் உள்ள டாடியா வனப்பகுதியின் அருகே 18 பேரின் உடல்கள் கருகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளன. இந்த பகுதியானது, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆசியாவில் இருந்து புலம்பெயர்ந்து வரக்கூடிய மக்கள், துருக்கியிலிருந்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஆற்றைக் கடந்து செல்வதற்கான முக்கிய பாதையாக இருப்பதால், உயிரிழந்தவர்கள் புலம்பெயர்ந்தவர்களாக இருக்கலாம் என தெரிகிறது.
அப்பகுதியில் வசிப்பவர்கள் யாரும் காணாமல் போனதாக புகார் அளிக்கப்படவில்லை என்பதால், சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்த குடியேறிகளின் உடல்களாக இருக்கலாம். இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோடைகாலத்தில் கிரீஸ் நாட்டில் காட்டுத்தீ ஏற்படுவது வழக்கமான நிகழ்வுதான். ஆனால் காலநிலை மாற்றத்துடன் தொடர்புடைய வழக்கத்திற்கு மாறான வெப்ப அலை, வறண்ட மற்றும் காற்றோட்டமான சூழ்நிலைகளால் சமீபத்திய ஆண்டுகளில் காட்டுத்தீயின் பாதிப்பு அதிக அளவில் உள்ளது.
The fires in Greece were started deliberately according to government sources. Dozens of people have lost their lives. A murder enquiry should now be started. #Greecewildfires pic.twitter.com/ZeT3AE9bzE
— Jim Ferguson (@JimFergusonUK) August 23, 2023
ஜூலை மாதம் ரோட்ஸ் தீவில் காட்டுத்தீ ஒரு வாரமாக எரிந்தது. அங்குள்ள ஓய்வு விடுதிகளில் இருந்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வெளியேற்றப்பட்டனர். காட்டுத்தீயில் வீடுகள் மற்றும் ஓட்டல்கள் கருகின.