போலீஸ் காவலில் இருந்து விடுதலையான டெலிகிராம் நிறுவன சிஇஓ.. நாட்டை விட்டு வெளியேற தடை!

 
Pavel Durov

சட்ட விரோத செயல்களை அனுமதித்த குற்றச்சாட்டில் கைதான டெலிகிராம் நிறுவன சிஇஓ நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் மிகவும் பிரபலமான செய்தி பரிமாற்ற செயலியாக உள்ளது டெலிகிராம். பணப்பரிமாற்ற மோசடி, போதைப்பொருள் கடத்தல் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு டெலிகிராம் செயலி பயன்படுத்தப்படுவதாக, ஐரோப்பிய நாடான பிரான்ஸ் குற்றஞ்சாட்டியது.

இந்த சூழலில்  கடந்த சனிக்கிழமை ஐரோப்பிய நாடான அசர்பைஜானில் இருந்து பிரான்சின் பாரீஸ் விமான நிலையம் வந்திறங்கிய டெலிகிராம் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான பாவெல் துரோவ், போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

Pavel Durov

டெலிகிராம் மூலம் நடைபெறும் சட்டவிரோத குற்றச் செயல்களுக்கு டெலிகிராம் நிறுவனம் துணை போகிறது என்றும் குற்றவியல் நடவடிக்கையை கண்காணிக்க தவறியது என்றும்  பயனாளர்களின் தரவுகளை அரசிடமிருந்து மறைத்து பாதுகாத்தது போன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவரை பிரான்ஸ் அரசு கைது செய்திருந்தது. 

இந்நிலையில், டெலிகிராம் தளத்தில் சட்ட விரோத செயல்களை அனுமதித்த குற்றச்சாட்டில் கைதான சிஇஓ பாவெல் துரோவ், போலீஸ் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார். எனினும், அவர் பிரான்ஸ் நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் அவர் மீதான வழக்கின் விசாரணை இனி தொடங்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Pavel

டெலிகிராம் சிஇஓ பவெல் துரோவ் நிபந்தனை ஜாமீனில் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார். இதற்கான ஜாமீன் தொகையாக நீதிமன்றத்தில் சுமார் 5 மில்லியன் யூரோக்கள் செலுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அவர் வாரம் இரண்டு முறை காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டுமென்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

From around the web