சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழர்.. திரும்பி பார்க்க வைத்த தர்மன் சண்முகமரத்னம்!

 
Tharman Shanmugaratnam

சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் முன்னாள் ஆளும் கட்சியைச் சேர்ந்த தமிழ் வம்சாவளியான தர்மன் சண்முகரத்னம் அபார வெற்றி பெற்றுள்ளார்.

சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாகூப்பின் 6 ஆண்டு பதவி காலம் வரும் 13-ம் தேதியுடன் முடிவடைகிறது. புதிய அதிபரை தேர்வு செய்வதற்காக தேர்தல் நேற்று (செப். 1) நடைபெற்றது. இதில் மீண்டும் போட்டியிட போவதில்லை என்று தற்போதைய அதிபர் ஹலிமா யாகூப் அறிவித்துவிட்டார்.

அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக கேபினட் மந்திரி பதவியில் இருந்த தர்மன் சண்முகரத்னம் தனது பதவியை ராஜினாமா செய்வதாக கடந்த ஜூன் மாதம் அறிவித்தார். இந்திய வம்சாவளியை சேர்ந்த தமிழரான தர்மன் சண்முகரத்னம், சீன வம்சாவளியை சேர்ந்தவரும் சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவருமான காச்சோங், டான்தின் லியான் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவியது.

Tharman Shanmugaratnam

இந்நிலையில், வாக்குப்பதிவு முடிவடைந்ததைத் தொடர்ந்து நேற்றிரவு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் 70.4 சதவீதம் வாக்குகள் பெற்று அதிபராக வெற்றி பெற்றுள்ளார் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதன்மூலம் சிங்கப்பூர் நாட்டின் 9வது அதிபராக தர்மன் சண்முகரத்னம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன்பு, இந்திய வம்சாவளியை சேர்ந்த 2 பேர் சிங்கப்பூர் அதிபராக பதவி வகித்துள்ளனர். கேரளாவை சேர்ந்த எஸ்.ஆர் நாதன், தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட செல்லப்பன் ராமநாதன் ஆகியோரை தொடர்ந்து தர்மன் சண்முகரத்னம் சிங்கப்பூர் அதிபராக பதவியேற்க உள்ளார்.

singapore

இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முகரத்னம், சிங்கப்பூர் நாணய வாரியத்தின் தலைவர், பிரதமரின் ஆலோசகர், நிதியமைச்சர், கல்வி அமைச்சர், துணை பிரதமர் என பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.

முன்னதாக உட்லண்ட்ஸ் ரிங் பிரைமரி பள்ளியில் உள்ள வாக்குச் சாவடியில் வேட்பாளருக்கு ஒதுக்கப்பட்ட சின்னத்தை பிரதிபலிக்கும் விதமாக அன்னாசிப்பழ உருவங்கள் கொண்ட ஆடையை அணிந்த பெண்மணியை தேர்தல் அலுவலர்கள் திருப்பி அனுப்பிய சுவாரஸ்ய சம்பவம் அரங்கேறியது அவர் உடையை மாற்றி வந்த பிறகே வாக்களிக்க அனுமதிக்கப்பட்டார்.

From around the web