மும்மொழிக் கொள்கைக்கு எதிராக அமெரிக்கத் தமிழர்கள்! முதலமைச்சர் ட்வீட் !!

 
Tamil

ஒன்றிய அரசு தமிழ்நாட்டு பள்ளிகளில் மும்மொழிக் கொள்கையை திணிப்பதற்கு எதிராக , அமெரிக்காவில் தமிழர்கள் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். கடந்த வாரம் சான் ஃப்ரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற போராட்டத்தைத் தொடர்ந்து நேற்று அமெரிக்காவின் மற்றொரு முக்கிய நகரமான டல்லாஸ் நகரில் ஏராளமான தமிழர்கள் ஒன்று திரண்டு ஒன்றிய அரசின் மும்மொழிக் கொள்கை தமிழ்நாட்டில் திணிக்கப்படுவதை கண்டித்து போராட்டம் நடத்தியுள்ளனர்.

போராட்டத்தில் பங்கேற்றத் தமிழர்கள் இருமொழிக் கொள்கையால் எப்படிப் பயனடைந்து அமெரிக்காவுக்கு வந்தோம் என்பதை நினைவுகூர்ந்து. நம்மைப் போல் தமிழ்நாட்டில் படிக்கும் ஏழை எளிய குழந்தைகளும் அதே வாய்ப்புகளைப் பெற வேண்டும் என்று வலியுறுத்தினர்.அறிவியலில் கற்றுக்கொள்ள ஏராளமான தேவைகள் இருக்கும் போது மாணவர்களின் பொன்னான நேரம், மூன்றாவது ஒரு மொழியை கற்பதில் வீணாகக் கூடாது என்பதையும் எடுத்துக் கூறினார்கள்.

தமிழ்நாட்டில் பேரறிஞர் அண்ணா இயற்றித் தந்த இருமொழிக் கொள்கை சட்டத்தை நிலைநாட்டுவதற்கு,  தமிழ்நாடு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு நாம் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்ற உறுதிமொழியையும் கூறினார்கள்.

டல்லாஸ் நகரில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தின் காணொலி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டுள்ளது. எக்ஸ் தளத்திலும் வெளியான அந்தத் தொலைக்காட்சி காணொலியை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பலத்தைக் காட்டும் இமொஜியுடன் தமிழ்வாழ்க என்று குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இந்த எக்ஸ் தள பதிவு வைரலாகி வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடந்த தமிழர் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜனவரி மாதம் நடைபெற்ற அயலகத் தமிழர் நாள் விழாவில் சிகாகோ விழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்தார்.

இந்நிலையில், மும்மொழிக் கொள்கைக்கு எதிராக ஒன்றிய அரசுடன் போராடி வரும் நிலையில், அமெரிக்கத் தமிழ்ர்களின் ஆதரவு முதலமைச்சரை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளதால் தான் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளதாகத் தெரிகிறது.


 

From around the web