அமெரிக்காவில் மாநாடு போல் நடந்த தமிழ்ப்பள்ளி ஆண்டு விழா!!

 
MTA 2025

அமெரிக்கா முழுவதும் சுமார் 250க்கும் மேற்பட்ட தமிழ்ப்பள்ளிகள் வார இறுதி நாட்களில் இயங்கி வருகின்றன. இது தவிர இணையவழி தமிழ்ப் பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன

1450 மாணவர்களுடன் அமெரிக்காவிலேயே மிகப்பெரிய தமிழ்ப்பள்ளிகளில் முக்கியமானதாக மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்க் கல்விக் கழகம் விளங்குகிறது. 2014ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பள்ளி டல்லாஸ் மாநகரில்  9 இடங்களில் வார இறுதி நாட்களில் நடைபெற்று வருகிறது. 400க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் மாணவர்களுக்கு தமிழ் மொழியுடன் தமிழர் பண்பாட்டையும் கற்பித்து வருகின்றனர்.

மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்க் கல்விக் கழகத்தின் 11வது ஆண்டு விழா ஒரு மாநாடு போல் இரண்டு நாட்கள் மார்ச் மாதம் 29, 30 தேதிகளில் நடைபெற்றது. 1450 மாணவர்களும் தங்கள் திறமைகளை மேடையில் அரங்கேற்றும் வகையில் 100க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை நடத்தினார்கள். வில்லுப்பாட்டு, சிலம்பாட்டம். கரகாட்டம், வாள் வீச்சு, நடனங்கள், நாடகங்கள், பாடல்கள், மேடைப்பேச்சு, நகைச்சுவை என பல்வேறு அம்சங்களுடன் இந்த விழா நடைபெற்றது.

மூன்று வயதிலிருந்து பதினைந்து வயது குழந்தைகளின் இயல் இசை நாடகம் என தாங்கள் கற்ற வித்தைகளை மேடையில் அரங்கேற்றினார்கள். ப்ளேனோ க்ராண்ட் சென்டரில் நடைபெற்ற இந்த விழாவில் பங்கேற்ற 4 ஆயிரம் பேர்களுக்கும் உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அமெரிக்காவில் பிறந்து வளரும் குழந்தைகள் ஆர்வத்துடன் தமிழ்மொழியை கற்று வருவதற்கு பள்ளி நிர்வாகிகள், தன்னார்வலர்கள், பெற்றோர்கள் என அனைவருடைய தன்னலமற்ற உழைப்பு மிகவும் முக்கியமானதாகும். இந்த தமிழ்ப் பள்ளி விழா அமெரிக்காவில் வசிக்கும் தமிழர்களின் தாய்மொழி மீதான பேரன்பை பறைசாற்றுவதாகவும் உள்ளது.