அமெரிக்கப் பல்கலைக் கழகத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்!

 
Rutger

அமெரிக்காவின் நியூஜெர்சி மாநிலத்தில் நியூப்ரன்ஸ்விக் நகரில் இயங்கி வரும் ரட்கர் பல்கலைக்கழகம் அமெரிக்காவின் அரசாங்கப் பல்கலைக்கழகங்களில் முன்னணி 15 பல்கலைக் கழகங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இங்கு ஏராளமான இந்திய மாணவர்கள் பல்வேறு துறைகளில் பயின்று வருகிறார்கள். 

தமிழ்நாடு அரசு சார்பில் தொழில்நுட்பப் புரட்சிக்காக தமிழ்நாடு தொழிநுட்ப மையம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு உலகம் முழுவதும் உள்ள முன்னணி அமைப்புகள், நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும் வகையில் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது . தமிழ்நாட்டின் தொழில்நுட்ப மனித வளத்தை சிறப்பான வகையில் பயன்படுத்தவும், தமிழ்நாட்டை புதிய தொழிநுட்பங்களின் மையமாக மாற்றவும் இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாடு தொழில்நுட்ப மையமும் (iTNT) அமெரிக்க ரட்கர் பல்கலைக்கழகமும் இணைந்து செயல்படும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. நியூஜெர்சி மாநில துணை ஆளுநர் தஹேஷா மற்றும் iTNT முதன்மை செயல் அலுவலர் வனிதா வேணுகோபால் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் ரோபோட்டிக்ஸ், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புதிய தொழிநுட்பங்களில் ஆராய்ச்சி, தொழில் வளர்ச்சிக்கு கூடுதல் வாய்ப்புகள் உருவாகும் என்று நியூஜெர்சி மாநில துணை ஆளுநர் தஹேஷா தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு தொழில்நுட்ப மையம் (iTNT) மற்றும் பிரபல முன்னணி அமெரிக்க பல்கலைக்கழகத்திற்கிடையேயான இந்த ஒப்பந்தம் மூலம் இந்தியாவிலும் அமெரிக்காவிலும் புதிய தொழிநுட்பங்களில் பெரும் வளர்ச்சி ஏற்படும் என்று சென்னை அமெரிக்கத் தூதரகரத்தின் தூதரக அதிகாரி கிரிஸ் ஹாட்ஜஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் தொழில் நிறுவனங்களுடன் மட்டுமல்லாமல், பல்கலைக்கழகங்களுடனும் ஒப்பந்தம் செய்து புதிய புதிய வாய்ப்புகளை உருவாக்கி வரும் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல்தியாகராஜன் மற்றும் வழிநடத்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டுக்குரியவர்கள்.இத்தகைய நீண்டகாலத் திட்டங்களைத் தீட்டி, செயல்படுத்தி வரும் இந்த அரசின் முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்

From around the web