அமெரிக்கத் தமிழர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலினின் முத்தான மூன்று கட்டளைகள்!
தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈட்டுவதற்காக அமெரிக்கா சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிகாகோவில் நடைபெற்ற அயலகத் தமிழர் நாள் விழாவில் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்.
நீதிக்கட்சி தொடங்கி, காமராஜர், அண்ணா, கலைஞர் ஆட்சிகளில் செயல்படுத்தப்பட்ட கல்வித் திட்டங்களினால் அறிவியல் தொழில்நுட்பத்தில் பயின்று ஏராளமானோர் தமிழ்நாட்டிலிருந்து அமெரிக்காவில் குடியேறியுள்ளீர்கள்.
53 ஆண்டுகளுக்கு முன்னால் முத்தமிழறிஞர் கலைஞர் முதலமைச்சராக இங்கே சிகாகோவுக்கு வந்துள்ளார். அவருடைய மகனான உங்களில் ஒருவனான நான் முதலமைச்சராக வந்து உங்களை அதே சிகாகோ நகரில் சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். உங்களைப் பார்த்துக் கொண்டிருந்தாலே எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.
உங்களுக்கு என்னுடைய கோரிக்கைகள் சில உள்ளது. அறிஞர் அண்ணா சொன்னார், நாம் அனைவரையும் ஒரு தாயின் வயிற்றில் பெற்றெடுப்பது என்பது சாத்தியமில்லை என்பதால் தான் வேறு வேறு தாயின் வயிற்றில் உருவாகி வந்துள்ளோம். தமிழ்த் தாய் தான் நமெக்கால் ஒரே தாய். உங்களுக்குள் எந்த பிளவுகளும் ஏற்படாமல் ஒரு தாய்ப் பிள்ளையாக நீங்கள் எப்போதும் ஒன்றிணந்து இருக்க வேண்டும்.
அறிவியல் மற்றும் கல்வியால் உயர்ந்து இந்த நிலையை அடைந்துள்ள நீங்கள் அதே அறிவியல், கல்வியின் மீது நம்பிக்கைக் கொண்டு வாழ்க்கையில் மென்மேலும் உயருங்கள்.
#Watch | “நான் இன்னும் தமிழ் மண்ணில்தான் இருக்கிறேன் என்ற உணர்வை தருகிறது...”
— Sun News (@sunnewstamil) September 8, 2024
- சிகாகோவில் நடைபெற்ற வட அமெரிக்க தமிழ்ச்சங்க கலை விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு#SunNews | #CMStalinInUS | #Chicago | #MKStalin | @mkstalin pic.twitter.com/8DacQRk8F7
ஆண்டுக்கு ஒரு முறையாவது தாய்த் தமிழ்நாட்டுக்கு உங்கள் குடும்பத்தோடு வருகை தந்து குமரிமுனையில் வள்ளுவரைக் கண்டு மகிழுங்கள். கீழடியின் தாய்மடியை பார்வையிட்டு நம் முன்னோர்களின் உயரிய வாழ்வு முறைகளை குழந்தைகளுக்கு எடுத்துரையுங்கள். நம்முடைய உறவினர் ஒருவரான முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தான் இங்கே முதலமைச்சராக உள்ளார் என்று உங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லுங்கள், என்று உற்சாகமாக உரையாற்றினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் பங்கேற்க, அமெரிக்காவின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் ஏராள்மானோர் வருகை தந்திருந்து விழாவை சிறப்பித்தனர்.