அமெரிக்காவில் அயலகத் தமிழர் நாள் விழா.. CM MKStalin காண சிகாகோவில் குவியும் தமிழர்கள்!!
தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் நோக்கத்துடனும், மாநிலத்தில் தொழில் முதலீடுகளையும், வளர்ச்சியையும் மேம்படுத்துவதற்காகவும் அமெரிக்கா நாட்டிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், சான்பிரான்சிஸ்கோவில் உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களான நோக்கியா, பேபால், ஈல்ட்டு இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ், மைக்ரோசிப் டெக்னாலஜி, இன்பிங்ஸ் ஹெல்த்கேர் மற்றும் அப்ளைடு மெட்டீரியல்ஸ் ஆகிய 6 நிறுவனங்களுடன் 900 கோடி ரூபாய் முதலீட்டில் 4,100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும், ஓமியம் நிறுவனத்துடன் எலக்ட்ரோலைசலர்கள் உற்பத்தி மற்றும் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தித் துறையில் 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிய தொழிற்சாலையை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டன.
இதன்மூலம் மொத்தம் 1,300 கோடி ரூபாய் முதலீட்டில் 4,600 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், கடந்த மாதம் 30-ம் தேதி அன்று ஆப்பிள், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களின் உயர் அலுவலர்களை முதல்வர் சந்தித்து, தமிழ்நாட்டில் திறன் வளர்ச்சி மிகுந்த இளைஞர்கள், பெண் கல்வி மற்றும் மேம்பாடு, உயர்கல்வியில் தமிழகத்தின் சாதனை ஆகியவற்றை பற்றி எடுத்துரைத்து, இந்தியாவிலேயே தொழில் தொடங்குவதற்கு மிகவும் உகந்த மாநிலமாக அனைத்து கட்டமைப்பு வசதிகளுடன் விளங்கும் தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்தார்.
இச்சந்திப்பின்போது, கூகுள் நிறுவனத்துடன் தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) ஆய்வகங்கள் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது, மேலும், தமிழ்நாடு அரசின் “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ், கூகுள் நிறுவனத்தின் வாயிலாக 20 இலட்சம் இளைஞர்களுக்கு அதிநவீன AI திறன் வளர்ச்சியுடன் பயிற்சி அளிப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சான் பிரான்சிஸ்கோவில் அமெரிக்க வாழ் தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், அமெரிக்க தமிழ்ச் சங்கங்களின் சார்பில் தமிழ்நாடு முதல்வர் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக சான் பிரான்சிஸ்கோவில் இருந்து கடந்த 3-ம் தேதி சிகாகோ வந்தடைந்த தமிழ்நாடு முதல்வர் அவர்களுக்கு சிகாகோவிற்கான துணைத் தூதர் சோம்நாத் கோஷ் அவர்கள் மலர்கொத்து வழங்கி வரவேற்றார். சிகாகோ விமான நிலையத்தில் முதலமைச்சர் அவர்களுக்கு, வட அமெரிக்க தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு (FETNA), தமிழ்நாடு அறக்கட்டளை, சிகாகோ தமிழ் சங்கம், மில்வாக்கி தமிழ் சங்கம், அறம் குழு, ப்ளூமிங்டன் தமிழ் சங்கம், அன்னை தமிழ் பள்ளி, மேடிசன் தமிழ் சங்கம் மற்றும் பியோரியா தமிழ் சங்கம் ஆகிய தமிழ்ச் சங்கங்களின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சிகாகோவில் பல்வேறு தொழில் நிறுவனங்களின் உயர் அலுவலர்களை சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்தார். அந்த வகையில், ஈட்டன் மற்றும் அஷ்யூரன்ட், டிரில்லியன்ட் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதனிடையே தமிழ்நாடு முதல்வர் இன்று சிகாகோ நகரில் அமெரிக்க வாழ் தமிழர்களை சந்தித்து உரையாற்ற உள்ளார். இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலினை காணவும் அவரது உரையை கேட்கவும் அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் இருந்து சிகாகோ நகருக்கு அமெரிக்க வாழ் தமிழர்கள் பெருமளவில் குவிந்து வருகின்றனர். டெக்சாஸ், புளோரிடா, உட்டா, நியூயார்க் ஆகிய நகரங்களில் இருந்து ஏராளமான அமெரிக்க வாழ் தமிழர்கள் சிகாகோவை நோக்கி படை எடுத்து வருகின்றனர்.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திக்குள்ள தருணம் தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியான தருமணம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் சிகாகோ நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோகள் வைரலாகி வருகிறது.