விண்வெளியில் 2வது முறையாக பிறந்தநாள் கொண்டாடிய சுனிதா வில்லியம்ஸ்
இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் இன்று தனது பிறந்தநாளை 2வது முறையாக விண்வெளியில் கொண்டாடினார்.
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையம் அமைத்து பூமி உள்ளிட்ட பிற கிரகங்களை ஆய்வு செய்து வருகின்றது. இங்கு ஆய்வுகளை மேற்கொள்வதற்காக சுழற்சி முறையில் வீரர்கள் வீராங்கனைகள் அவ்வபோது விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில், இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் என்ற விண்வெளி வீரருடன் கடந்த ஜூன் 5-ம் தேதி விண்வெளிக்கு புறப்பட்டுச் சென்றார். அமெரிக்காவின் கேப் கனாவெரல் ஏவுதளத்தில் இருந்து புறப்பட்ட அவர்கள் ஜூன் 7-ம் தேதி சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்தனர்.
இருவரும் விண்வெளி பயணத்தை முடித்துக்கொண்டு கடந்த 13-ம் தேதி பூமிக்கு திரும்பும் வகையில் பயண திட்டம் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் பயணத்திட்டம் திடீரென 26-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. பின்பு அந்த தேதியிலும் அவர்கள் புறப்படவில்லை. அவர்கள் இருந்த விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக அவர்கள் திரும்பி வருவதில் பிரச்சினை ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியானது. தொழில்நுட்ப கோளாறுகள் சரிசெய்து இவர்கள் பூமி திரும்ப அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஆகும் என தெரியந்துள்ளது.
இதற்கிடையே, சுனிதான வில்லியம்ஸ் 2வது முறையாக விண்வெளியில் தனது பிறந்தநாளை கொண்டாடினார். அதன்படி, சுனிதா வில்லியம்ஸ் செப்டம்பர் 19-ம் தேதி (இன்று) தனது 59-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். இதற்கு முன்பு, கடந்த 2012ம் ஆண்டு ஜூலை முதல் நவம்பர் வரை அவர் விண்வெளியில் இருந்தபோது தன்னுடைய பிறந்தநாளை முதல்முறையாக அங்கு கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.