போலீஸ் வாகனத்தை குறிவைத்து தற்கொலைப் படை தாக்குதல்... 9 போலீசார் பலி!! பாகிஸ்தானில் பரபரப்பு

 
Pakistan

பாகிஸ்தானில் காவல்துறையினரை குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலை படை பயங்கரவாத தாக்குதலில் 9 போலீசார் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் பலுசிஸ்தான் மாகாணம் சிப்பி நகரில் இன்று போலீசார் ஒரு வாகனத்தில் சென்று கொண்டு இருந்தனர். அந்த வாகனத்தில் பலுசிஸ்தான் பகுதி காவலர்கள் தங்கள் பணியை முடித்து திரும்பியுள்ளனர். அப்போது அங்குள்ள காம்ப்ரி பாலத்தில் டிரக் மீது பயங்கரவாத தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

Pakistan

வாகனம் மீது குண்டுவெடித்ததில் டிரக் கவிழுந்து வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த தாக்குதல் சம்பவத்தில் 9 போலீசார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 13 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலர் கவலைக்கிடமாக உள்ளதாக காவல் கண்காணிப்பாளர் போலான் மெஹ்மூத் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உள்ளூர் நிர்வாகம், தடயவியல் அதிகாரிகள், வெடிகுண்டு நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு பலுசிஸ்தான் மாகண முதல்வர் மிர் அப்துல் குடோஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “பிராந்தியத்தில் அமைதியை சீர்குலைக்கும் நோக்கில் பயங்கரவாத சக்திகள் இது போன்ற சதிச் செயலில் ஈடுபடுகின்றன. மக்கள் ஆதரவுடன் இதை முறியடிப்போம்” என அவர் உறுதி தெரிவித்துள்ளார். 

Pakistan

பாகிஸ்தானில் சமீப நாள்களாகவே பயங்கரவாத தாக்குதல் சம்பவம் வெகுவாக அதிகரித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் 58 பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெற்றதாகவும், இது முந்தைய மாதத்தை விட 32 சதவீதம் அதிகம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

From around the web