பாகிஸ்தானில் அரசியல் கட்சி மாநாட்டில் மனித வெடிகுண்டு தாக்குதல்.. 44 பேர் உயிரிழப்பு! அதிர்ச்சி வீடியோ

 
Pakistan

பாகிஸ்தானில் அரசியல் கட்சி மாநாட்டில் நடத்தப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்தில் பலி எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது.

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள பஜார் மாவட்டத்தில் இஸ்லாமிய அரசியல் கட்சி கூட்டம் ஒன்று நடைபெற்றது. ஜே.யு.ஐ.எப். அமைப்பு சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டிருந்தனர். அப்போது அங்கே எதிர்பாராதவிதமாக திடீரென குண்டுவெடிப்பு ஏற்பட்டது.

இந்த பயங்கர குண்டுவெடிப்பில் ஜேயூஐஎஃப் கட்சியின் உள்ளூர் தலைவர் மவுலானா ஜியாஉல்லா உள்ளிட்ட 35 பேர் உயிரிழந்ததாகவும், 150 பேர் படுகாயம் அடைந்ததாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் இந்த மனித வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது.

Pakistan

மேலும் இந்தசம்பவத்தில் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாவும், 17 பேர் படுகாயங்களுடன் பெஷாவர் மற்றும் டைமர்கெராவில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. தற்கொலை படை தாக்குதல் மூலம் இந்த சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, பாதுகாப்புப் படையினர் நடத்திய விசாரணையில் மனித வெடிகுண்டு தாக்குதல் என்பதும், 12 கிலோ வெடிபொருள் பயன்படுத்தப்பட்டதும் தெரியவந்துள்ளது. இந்த குண்டு வெடிப்புக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை.


இந்த குண்டுவெடிப்புக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் என்று அமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணை நடைபெற்று வருவது தொடர்பாக, உள்துறை அமைச்சர் ராணா சனாவுல்லா மற்றும் கைபர் பக்துன்க்வா அரசாங்கத்திடம் இருந்து பிரதமர் அலுவலகம் அறிக்கை கோரியுள்ளது.

From around the web