சீனாவில் திடீர் நிலச்சரிவு.. தோண்டி எடுக்கப்படும் சடலங்கள்..!
சீனாவில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக லெஷான் நகருக்கு அருகிலுள்ள ஜின்கோஹேவில் அரசுக்கு சொந்தமான வனத்துறை அலுவலகம் உள்ள பகுதியில் இன்று காலை 6 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலச்சரிவில் பலர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டதாக தகவல் வெளியானது. உடனடியாக மீட்புக்குழுவினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் 14 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். 5 பேர் மாயமாகி உள்ளனர்.
தற்போது, அவர்களை தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியானது மாகாண தலைநகர் செங்டுவில் இருந்து 240 கிமீ (150 மைல்) தொலைவில் உள்ள மலைப்பிரதேசம் ஆகும்.
தொலைதூர மற்றும் அடர்ந்த காடுகள் நிறைந்த இப்பகுதி, நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடரால் தொடர்ந்து பேரழிவுக்கு உள்ளாகி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.