தென் கொரியா விமான விபத்து! கடைசி 4 நிமிடங்களில் நடந்தது என்ன?
தென் கொரியாவின் ஜேஜு நிறுவன விமானம் தரையிறங்கும் நேரத்தில் விபத்துக்குள்ளானது. கடைசி நான்கு நிமிடங்களில் என்ன நடந்தது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தரையிறங்கத் தயாராக இருந்த நிலையில் விமானத்தில் பறவை மோதியதாக கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தெரிவித்துள்ளார். அதனால் தரையிறங்கும் திட்டத்தை மாற்றிவிட்டு மேலும் ஒரு சுற்று வானில் வட்டமிடப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் சொன்னபடி வானில் வட்டமிட செல்லாமல், அவசரமாக தரையிறங்க முயற்சித்துள்ளார். விமானத்தின் சக்கரங்கள் வெளிவராமல் வயிற்றுப் பகுதியை தரையில் மோதி இறக்க திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது. இப்படி அவசர தரையிறக்கத்திற்கு விமான நிலையத்தை தயார் செய்தபிறகே இறங்குவார்கள். மேலும் விமானத்தில் உள்ள பெட்ரோலை வானிலிருந்தே கீழே கொட்டிவிட்டே வருவார்கள்.
ஆனால் விமானி என்ன காரணத்திற்காக இப்படி உடனடியாக தரையிறங்க முயற்சித்தார் என்று தெரியவில்லை. அப்படித் தரையிறங்கிய போது விமானத் தளத்தின் சுற்றுச்சுவரில் மோதி விபத்து நடந்துள்ளது. விமானத்தில் இருந்த 181 பேரில் 2 பேர் மட்டுமே உயிர் பிழைத்துள்ளனர். பயணம் செய்தவர்களில் பெரும்பான்மையினர் தென் கொரியாவைச் சேர்ந்தவர்கள். தாய்லாந்துக்கு கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு சென்று ஊர் திரும்பும் போது இந்த சோகம் நடந்துள்ளது. விமானத்தின் கருப்புப் பெட்டி கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் தகவல்கள் கருப்புப் பெட்டியிலிருந்து கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.