குழந்தை உட்பட 4 பேரை சுட்டுக்கொன்ற ராணுவ வீரர்.. ஜெர்மனியில் பயங்கரம்
ஜெர்மனியில் குழந்தை உட்பட 4 பேரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற ராணுவ வீரர் ஒருவர் போலீசில் சரணடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜெர்மனியின் லோயர் சாக்சனி மாகாணத்தில் உள்ள வெஸ்டர்வெஸ்டெட் மற்றும் போடெல் என்னும் இடங்களில் அமைந்துள்ள இரண்டு வீடுகளுக்கு போலீசார் அழைக்கப்பட்டார்கள். அந்த இரண்டு வீடுகளிலுமாக, ஒரு குழந்தை உட்பட நான்கு பேரின் உயிரற்ற உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளார்கள். முந்தைய இரவு அவர்கள் கொல்லப்பட்டதாக தெரிகிறது.
இந்நிலையில், அந்த சம்பவங்கள் தொடர்பாக, ராணுவ வீரர் ஒருவர் போலீசில் சரணடைந்துள்ளார். அவரைக் கைது செய்துள்ள போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். “குற்றவாளியின் நோக்கம் தற்போது திட்டவட்டமாக அறியப்படவில்லை. குடும்ப உறவுகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு நோக்கத்தை நிராகரிக்க முடியாது” என்று வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
இந்த கொலைகளுக்கான காரணம் தெரியவில்லை என்றாலும், அது குடும்பத் தகராறாக இருக்கலாம் என தாங்கள் கருதுவதாக போலீசார் தெரிவித்துள்ளார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.