ஏப்ரல் 8-ம் தேதி சூரிய கிரகணம்.. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
வரும் 8-ம் தேதி வானில் நிகழும் சூரிய கிரகணத்தை முன்னிட்டு வட அமெரிக்காவில் உள்ள கனடா மற்றும் அமெரிக்காவில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓர் ஆண்டுக்கு இரண்டு சூரிய கிரகணங்களும் இரண்டு சந்திர கிரகணங்களும் நிகழ்வது வழக்கம். பூமிக்கும் சூரியனுக்கும் இடையே சந்திரன் நேரடியாக நகரும் போது, சூரியனின் ஒளி மறைக்கப்பட்டு, சூரிய கிரகணம் ஏற்படுகிறது. சூரியனின் ஒளியைத் தடுப்பதால், பூமியில் தற்காலிக இருளை ஏற்படுத்துகிறது. இந்த நிகழ்வு வேத ஜோதிடத்தில் முழு சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் வரும் 8-ம் தேதி நிகழவுள்ளது. மெக்சிகோவில் தொடங்கி, முழு அமெரிக்காவை கடந்து, கனடா வரை சூரிய கிரகணம் தெரியும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இந்த நிகழ்வு சுமார் 1000 கிலோ மீட்டர் வரை தெரியும்.
இந்நிலையில் வட அமெரிக்காவில் சூரிய கிரகணம் நிகழ உள்ளதால் நயாகராவில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1979-க்கு பிறகு நயாகராவில் சூரிய கிரகணம் தென்பட உள்ளதால் லட்சக்கணக்காக மக்கள் அங்கு குவிய வாப்புள்ளது. இதன் காரணமாக அங்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
நயாகரா, கனடாவில் தெற்கு ஒன்டாரியோவில் அமைந்துள்ளது. இங்குள்ள நீர்வீழ்ச்சி உலக புகழ்பெற்றது. வரும் 8-ம் தேதி சூரிய கிரகணம் நிகழ உள்ள நிலையில், அது நயாகரா நீர்வீழ்ச்சியில் பிரதிபளிக்கும். இந்த நிகழ்வை காண ஏராளமான பொதுமக்கள் அங்கு கூட வாய்ப்புள்ள நிலையில், அவசர நிலை அறிவித்துள்ளதாக நயாகரா பிராந்தியத் தலைவர் ஜிம் பிராட்லி தெரிவித்துள்ளார்.
சூரிய கிரகணத்தின் அன்று மில்லியன் கணக்கான மக்கள் நயாகரா நீர்வீழ்ச்சியில் கூடுவார்கள் என போலீசார் மதிப்பிட்டுள்ளனர். அவசரகால தேவைகலான மொபைல் போன், நெட்வொர்க், போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காணும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சூரிய கிரகணம் நிகழும் முன் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளை இருப்பு வைத்துக்கொள்ளுமாரும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சாலை விதிகளை பின்பற்றவும், சூரிய கிரணத்தை சாலையில் நின்று புகைப்படங்கள் எடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் சூரிய கிரகணத்தை முன்னிட்டு நயாகராவில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சூரிய கிரகணத்தை நேரடியாக பார்ப்பதை தவிர்த்து ISO 12312-2 சான்றளிக்கப்பட்ட கண்ணாடிகளைப் பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.