அமெரிக்காவை புரட்டிப் போட்ட பனிப்புயல்! மூன்றரை அடி உயரத்துக்கு குவிந்த பனிமழை!!

குளிர்காலம் இன்னும் தொடங்காத நிலையில் இந்த ஆண்டின் முதல் பனிப்புயல் அமெரிக்காவின் வடக்கு மாநிலங்களை மூழ்கடித்துள்ளது.
தேங்க்ஸ் கிவிங் விடுமுறை வார இறுதியில் சொந்த ஊருக்குத் திரும்புகிறவர்கள் சாலைகளில் வீசிய பனிமழையால், தொடர்ந்து செல்லமுடியாமல் தத்தளித்தனர்.
நியூயார்க், பென்சில்வேனியா மற்றும் மிஷிகன் மாநிலங்களில் பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நியூயார்க்கில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்டிக் பகுதியிலிருந்து வீசிய காற்றினால் தட்பவெப்பம் 10 முதல் 20 டிகிரி ஃபாரன்ஹீட் ஆக குறைது விட்டது. பென்சில்வேனியா மாநிலத்தின் ஏரி கவுண்டியில் தான் அதிகளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அருகே உள்ள ஒஹாயோ மாநிலத்தின் வடக்கு எல்லையிலும் பனிப்புயல் வீசியது அங்கே ஒரிடத்தில் மூன்றரை அடி உயரத்திற்கு பனிமழை பெய்துள்ளது. இடுப்பளவு உயரத்திற்கு பனியால் மூடப்பட்ட ஒருவரின் புகைப்படம் இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.
இந்த ஆண்டின் முதல் பனிமழையே பெருமளவிற்கு பொழிந்துள்ளதால் அடுத்தடுத்த நாட்களில் எப்படி இருக்குமோ என்ற கவலை வட மாநில மக்களிடையே எழுந்துள்ளது.டிசம்பர் மாதம் தொடர்ந்து பனிப்புயல் வீசும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.