சுலோவக்கியா பிரதமர் மீது துப்பாக்கி சூடு.. நடத்தியது யார்? பரபரப்பு வீடியோ

 
Slovakia

சுலோவக்கியா பிரதமர் மீது துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐரோப்பா நாடான சுலோவக்கியாவின் பிரதமராக இருப்பவர் ராபர்ட் பிகோ (59).  இந்த நிலையில், தலைநகரில் இருந்து வடகிழக்கே 150 கி.மீ. தொலைவில் உள்ள ஹண்ட்லோவா நகரில் கூட்டம் ஒன்று நேற்று மதியம் நடத்தப்பட்டது.  இதில், அவருடைய ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர். ஆதரவாளர்களுடனான இந்த சந்திப்புக்கு பின்னர் பொது மக்களையும் அவர் சந்தித்து பேசினார்.  

அப்போது, அந்த கூட்டத்தில் இருந்த மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கியால் பிகோவை நோக்கி பல முறை சுட்டுள்ளார்.  இதனால், அவரை சுற்றி நின்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். துப்பாக்கி சூட்டில், பிகோவின் வயிற்றில் பலத்த காயம் ஏற்பட்டது.  இடுப்பு பகுதியிலும் குண்டு பாய்ந்தது. அவர் சரிந்து கீழே விழுந்ததும், உடனடியாக சுற்றியிருந்தவர்கள் ஓடி சென்று அவரை மீட்டனர். இதன்பின் கருப்பு நிற கார் ஒன்றில் அவரை ஏற்றி சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

சந்தேகத்திற்குரிய நபரை போலீசார் உடனடியாக கைது செய்தனர். அந்த பகுதியை போலீசார் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தாக்குதலை நாடாளுமன்றத்தில் நடந்த கூட்டத்தொடரின்போது, துணை சபாநாயகர் லூபோஸ் பிளாஹா உறுதிப்படுத்தினார். இதன்பின்னர், அடுத்த அறிவிப்பு வரும் வரை அவை ஒத்தி வைக்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டது.

slovakia

இதன்பின் பிகோ, விமானத்தில் பன்ஸ்கா பிஸ்டிரிகா பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டார்.  அவருக்கு அறுவை சிகிச்சை நடந்தது.  முதல்கட்ட விசாரணையில் இது அரசியல் உள்நோக்கம் கொண்டது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

துணை பிரதமர் தோமஸ் தரபா நேற்றிரவு கூறும்போது, மருத்துவமனையில் பிகோவுக்கு நடந்த அறுவை சிகிச்சைக்கு பின் அவர் நலமுடன் உள்ளார். அவர் உயிர் பிழைப்பார் என நினைக்கிறேன் என்று கூறினார்.  அவருடைய உடல்நலம் சீராக உள்ளது என்று கூறப்படுகிறது. எனினும், தீவிர சிகிச்சை அளிக்க வேண்டிய நிலையிலேயே அவர் உள்ளார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

பிகோவை துப்பாக்கியால் சுட்டவர் எதற்காக இந்த தாக்குதலை நடத்தி உள்ளார். இதற்கான பின்னணி என்ன? என்று விசாரணை நடந்து வருகிறது. அவர், இதற்கு முன்பு வணிக வளாகம் ஒன்றில் பாதுகாவலராக பணியாற்றியவர். 3 கவிதை தொகுப்புகளை எழுதியுள்ளார். 2015-ம் ஆண்டில் இருந்து, சுலோவக் நாட்டின் எழுத்தாளர்களுக்கான சங்கத்தின் உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.

அவரிடம் துப்பாக்கி வைத்திருப்பதற்கான உரிமம் உள்ளது என அவருடைய மகன் கூறியுள்ளார். ஆனால், அவருடைய நோக்கம் என்னவென்றோ, அவர் என்ன திட்டமிட்டார் என்றோ, நடந்தது என்னவென்றோ தெரியாது என்றும் கூறியுள்ளார். பிகோவுக்கு ஆதரவாக அவர் வாக்களிக்கவில்லை என்று மட்டும் அந்நபரின் மகன் கூறியுள்ளார்.


பிரதமர் பிகோ மீது துப்பாக்கி சூடு நடத்தியபோது, சாம்பல் நிற முடியுடன், வெளுத்த நிலையிலான ஊதா சட்டையை அணிந்த அந்நபரின் கைகளை பின்னால் கட்டி, போலீசார் கைது செய்தனர். 71 வயதுடைய லெவிஸ் நகரை சேர்ந்த அவர், இலக்கிய கிளப் ஒன்றின் நிறுவனராகவும் உள்ளார் என சந்தேகிக்கப்படுகிறது.

சந்தேகத்திற்குரிய நபர் துப்பாக்கியால் சுட்டுள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டால், அவருடைய உறுப்பினர் அந்தஸ்து உடனடியாக ரத்து செய்யப்படும். லெவிஸ் நகரில் வன்முறைக்கு எதிரான இயக்கம் ஒன்றை நிறுவியவர் என்று சமூக ஊடகத்தில் அவரை பற்றிய வீடியோ ஒன்று தெரிவிக்கின்றது. இந்த இயக்கத்திற்கு என்று தனியாக ஃபேஸ்புக் பக்கம் ஒன்றும் உள்ளது.

அதில், சமூகத்தில் வன்முறை பரவலை தடுக்கும் இலக்குடன் வளர்ந்து வரும் அரசியல் இயக்கம் என அதில் விளக்கம் கொடுக்கப்பட்டு இருந்தது.  ஐரோப்பாவில் போர் மற்றும் வெறுப்பை தடுப்பதற்காகவும் இந்த இயக்கம் உள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

From around the web