தூக்கத்தில் நடக்கும் வியாதி.. 1.5 மைல் தொலைவு காட்டுக்குள் சென்று படுத்துக்கொண்ட 10 வயது சிறுமி.. வைரல் வீடியோ!

 
Louisiana Louisiana

அமெரிக்காவில் 10 வயது சிறுமி தூக்கத்தில் நடக்கும் வியாதியால் 1.5 மைல் தொலைவுக்கு காட்டுக்குள் நடந்து சென்று படுத்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் லூசியானா மாகாணத்திற்கு உட்பட்ட ஷ்ரெவ்போர்ட் பகுதி அருகே பெற்றோருடன் வசித்து வரும் சிறுமி பெய்டன் செயின்டிக்னன் (10). இந்த சிறுமிக்கு தூக்கத்தில் நடக்கும் சோம்னாம்புலிசம் என்ற வியாதி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சம்பவத்தன்று இரவில் சிறுமி பெய்டன், வீட்டில் இருந்து வெளியேறி தூக்கத்திலேயே நடந்து, லூசியானா காட்டு பகுதிக்குள் சென்றிருக்கிறாள்.

சிறுமியை தேடி பெற்றோர், பக்கத்து வீட்டுக்காரர்கள் என பலரும் பல இடங்களில் சென்று பார்த்துள்ளனர். இந்த தகவல் அறிந்து போலீசார் மற்றும் நூற்றுக்கணக்கான தன்னார்வலர்களும் சிறுமியை தேடும் பணியில் ஈடுபட்டனர். எனினும், டிரோன் இயக்குபவரான ஜோஷ் குளோபர் என்பவர் உதவியால் சிறுமி பாதுகாப்பாக மீட்கப்பட்டு உள்ளார். டிரோன் பறந்து 20 நிமிடங்களுக்கு பின்னர் சிறுமி கண்டறியப்பட்டாள்.

Louisiana

அப்போது, வெள்ளை மற்றும் ஊதா நிறத்திலான பைஜாமா உடையணிந்து காணப்பட்டார். காட்டில், தரையில் சுருண்டு படுத்து கிடந்த சிறுமியை அவளுடைய தோழியின் தந்தை மற்றும் பலர் சேர்ந்து மீட்டு, வெளியே கொண்டு வந்தனர். சிறுமி 1.5 மைல் தொலைவுக்கு நடந்து வந்து காட்டுக்குள் படுத்திருக்கிறார் என தெரிய வந்துள்ளது. வீட்டில் இருந்து சென்ற அந்த சிறுமி காட்டுக்குள் அலைந்து, திரிந்திருக்கிறாள். 

பின்னர் ஓரிடத்தில் படுத்து தூங்கி விட்டாள். நல்லவேளையாக, கொசுக்கள் கடித்தது தவிர வேறு எந்த பாதிப்புக்கும் சிறுமி ஆளாகவில்லை. சிறுமியை டிரோன் உதவியுடன் காட்டில் இருந்து மீட்கும் காட்சிகள் வீடியோவாக வெளிவந்து வைரலாகி வருகின்றன.


இந்த தூக்கத்தில் நடக்கும் வியாதிக்கான சரியான காரணம் என்னவென்று தெரியவரவில்லை. ஆனால், பெரியவர்களுக்கு இந்த வியாதி இருந்தது என்றால், குழந்தைகளுக்கும் இது ஏற்படும். இதற்கான சாத்தியம் 47 சதவீதம் ஆகும். பெற்றோர் இருவருக்கும் வியாதி இருந்ததென்றால், இது 67 சதவீதம் ஆக இருக்கும் என மருத்துவ மையம் ஒன்று தெரிவிக்கின்றது.  எனினும், பருவ வயது வரும்போது, அதில் இருந்து அவர்கள் வெளியே வந்து விடுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

From around the web