விமான நிலையத்தில் பிரபல பாடகி கைது.. இசை நிகழ்ச்சிகள் ரத்து.. ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட நிக்கி!
பிரபல பாடகி நிக்கி மினாஜ் ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட நிலையில், மான்செஸ்டரில் நடக்கவிருந்த அவரது இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தை சேர்ந்தவர் நிக்கி மினாஜ். சொல்லிசை பாடகியான இவர், ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்தில் போதை மருந்து விவகாரத்தில் கைது செய்யப்பட்டார். இங்கிலாந்தின் மான்செஸ்டரில் அவரது அடுத்த நிகழ்ச்சி நடக்கவிருந்தது
இந்நிலையில், கைதின் காரணமாக அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், இனோரு நாள் இசை நிகழ்ச்சி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய அனுமதிச் சீட்டை பயன்படுத்தியே, அந்த நிகழ்ச்சியில் ரசிகர்கள் கலந்துகொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பாடகி நிக்கி மினாஜ் போலீஸ் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் பயணம் மேற்கொள்ள தடையில்லை என்றும் நெதர்லாந்து போலீசார் அறிவித்துள்ளனர். பாடகி நிக்கி மினாஜிடம் இருந்து கைப்பற்றப்பட்ட போதை மருந்தானது மருத்துவ பயன்பாட்டிற்கானது என்றே கூறப்படுகிறது.
ஆனால் நெதர்லாந்தில் இருந்து இன்னொரு நாட்டிற்கு கொண்டுசெல்லும் அனுமதி இல்லை. தற்போது அவர் போலீஸ் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டாலும், அபராதம் செலுத்த நேரிடும் என்றே தகவல் வெளியாகியுள்ளது.