குருத்வாரா வாசலில் சீக்கிய இசைக்கலைஞர் சுட்டுக்கொலை.. அமெரிக்காவில் பயங்கரம்
அமெரிக்காவில் சீக்கிய பஜனைக் குழுவைச் சேர்ந்த இசைக்கலைஞரை மர்ம நபர்கள் சுட்டுக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் அலபாமா மாகாணம் செல்மா நகரில் சீக்கிய வழிபாட்டு தலமான குருத்வாரா அமைந்துள்ளது. இந்த குருத்வாராவுக்கு வெளியே கடந்த சனிக்கிழமையன்று சீக்கிய பஜனைக் குழுவைச் சேர்ந்த ஒருவர் நின்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள், திடீரென அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் அந்த சீக்கியர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உயிரிழந்தவரின் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த சீக்கியர் பெயர் கோல்டி என்ற ராஜ் சிங் (29) என்பதும், அவர் இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டம், தண்டா சகுவாலா கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
சீக்கிய பஜனைக் குழுவைச் சேர்ந்த இசைக்கலைஞர் மற்றும் பாடகரான இவர், தனது இசைக்குழுவினருடன் கடந்த ஓராண்டுக்கும் மேலாக அமெரிக்காவில் தங்கியிருந்தார். அவரது திடீர் மரணம் அவரது குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. சீக்கியர்கள் மீதான வெறுப்புணர்வினால் இந்த கொலை நடந்திருக்கலாம் என அவரது குடும்பத்தினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்த கொலை தொடர்பாக செல்மா போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். வெறுப்புணர்வு குற்றம் என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணை நடைபெற்றாலும், கொலைக்கான காரணம் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. ராஜ் சிங்கின் உடலை இந்தியாவிற்கு கொண்டு வர உதவி செய்ய கோரி, பிரதமர் நரேந்திர மோடிக்கு அவரது குடும்பத்தினர் கடிதம் எழுதியுள்ளனர்.