பல்கலைக்கழக வளாகத்தில் துப்பாக்கி சூடு.. பேராசிரியர் பலி.. அமெரிக்காவில் தொடரும் சோகம்!
அமெரிக்காவில் பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பல்கலைக்கழக பேராசிரியர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மக்களை துப்பாக்கி சூட்டுக்கு பறிகொடுத்து வரும் வல்லரசு நாடான அமெரிக்கா, துப்பாக்கி கலாச்சாரத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது. அந்த அளவுக்கு அமெரிக்காவில் துப்பாக்கி பயன்பாடு, ஒரு மிக பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. அமெரிக்காவில் ஒரு நாளைக்கு சராசரியாக 53 பேர் துப்பாக்கிச்சூட்டில் பலியாவதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
இந்த நிலையில் அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தின் சேப்பல் ஹில்லில் உள்ள வடக்கு கரோலினா பல்கலைக்கழகத்தில் உள்ள அறிவியல் கட்டிடத்தில் நுழைந்த மர்ம நபர் ஒருவர், தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் அங்கிருந்த பேராசிரியரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில் பேராசிரியர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் உயிரிழந்த பேராசிரியரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்துள்ளனர்.
இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சந்தேக நபர் மற்றும் ஆசிரியரின் பெயர்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை. துப்பாக்கிச் சூட்டில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.