ஜெருசலேமில் பேருந்து நிறுத்தத்தில் திடீர் துப்பாக்கி சூடு.. 3 பேர் பலி!

இஸ்ரேலில் நடந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கடந்த 16 ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் ஹமாஸ் அமைப்பினர், கடந்த மாதம் 7-ம் தேதி இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 1,200 பேர் கொன்று குவிக்கப்பட்ட நிலையில், சுமார் 250 பேர் ஹமாஸ் அமைப்பினரால் சிறைபிடிக்கப்பட்டு காசாவுக்குள் இழுத்து செல்லப்பட்டனர். இதை தொடர்ந்து, காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. இந்த போரில் காசாவில் மட்டும் 14,500-க்கும் அதிகமான உயிர்கள் பறிபோயின. சுமார் 50 ஆயிரம் பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த சூழலில்தான் இஸ்ரேல் தனது பிடிவாதத்தை கைவிட்டு தற்காலிக போர் நிறுத்தத்துக்கு சம்மதம் தெரிவித்தது. அதை தொடர்ந்து, இஸ்ரேல் - ஹமாஸ் இடையே தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி கடந்த 24-ம் தேதி காசாவில் 4 நாள் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. நேற்றைய நிலவரப்படி, ஹமாஸ் படையினர் 63 இஸ்ரேலியர்கள் மற்றும் 20 வெளிநாட்டினரை விடுதலை செய்துள்ளனர், இதற்கு மாற்றாக 180 பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் விடுதலை செய்துள்ளது.
இந்நிலையில் இஸ்ரேலிய நகரான ஜெருசலேமில் உள்ள பேருந்து நிலையத்தில் அல்-கஸ்ஸாம் படைகளை சேர்ந்த இரண்டு பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தி இருப்பதாக ஹமாஸ் ராணுவ படையின் செய்தி தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார். பேருந்து நிலையத்தின் மீது நடத்தப்பட்ட இந்த துப்பாக்கி சூடு திடீர் தாக்குதலில் 3 பேர் வரை கொல்லப்பட்டதுடன், 6 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர்.
#BREAKING | At least 6 people shot in Jerusalem, 2 attackers killed#القدس pic.twitter.com/UumWKU3fe5
— Breaking news 24/7 (@aliifil1) November 30, 2023
இது தொடர்பாக வெளியாகியுள்ள வீடியோ காட்சிகளில், பேருந்து நிலையத்தில் முன் நிறுத்தப்பட்ட காரில் இருந்து இறங்கிய இரண்டு பேர் அங்கு நின்று கொண்டு இருந்த பயணிகளை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியதை பார்க்க முடிகிறது. இதையடுத்து அப்பகுதியில் இருந்த போலீசார் மற்றும் பொதுமக்களில் ஒருவர் பயங்கரவாதிகளை நோக்கி பதில் தாக்குதல் நடத்தினர். இதில் 2 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.