அதிர்ச்சி.. பிடித்தமான மீன் உணவு.. இரண்டு கைகள் மற்றும் கால்களை இழந்த பெண்.. அப்படி என்ன பிரச்சினை?
அமெரிக்காவில் திலாப்பியா மீன் உணவை சாப்பிட்ட பெண் ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்து வருபவர் லாரா பராசாஸ் (40). இவர் உள்ளூரில் உள்ள சந்தைக்கு சென்று திலப்பியா என்ற மீனை வாங்கி வந்து வீட்டில் சமைத்து சாப்பிட்டார். சிறிது நேரத்தில் அவரது உடலில் மாற்றம் ஏற்பட்டது. கை விரல்கள் கறுப்பாக மாறியது. பாதங்கள் மற்றும் கீழ் உதடு கறுப்பானது.
இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் அவர் கோமா நிலைக்கு சென்றார். சிறுநீரகமும் பாதிக்கப்பட்டது. மேலும் கை, கால்களும் முற்றிலும் செயல் இழந்ததால் உயிருக்கு போராடி வருவதாக லாரா பராசாஸ் தோழி மெசினா தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக அவரது தோழி மெசினா கூறியதாவது, லாரா கிட்டத்தட்ட தன் உயிரை இழந்துவிட்டார். அவருக்கு சுவாச கருவி பொருத்தப்பட்டு உள்ளது. கடல் உணவுகளில் பொதுவாக கொடிய பாக்டீரியாக்கள் காணப்படும். இந்த உணவுகளை முறையாக தயார் செய்து சாப்பிடாவிட்டால் உடலுக்கு தொந்தரவு கொடுக்கும். சந்தையில் இருந்து வாங்கி வந்த மீனை சரியாக வேக வைக்காமல் அப்படியே சாப்பிட்டதால் இந்த நிலைக்கு ஆளாகிவிட்டார் என்று கூறினார். தொடர்ந்து அந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மருத்துவர்கள் தெரிவிக்கையில், Vibrio Vulnificus என்ற கொடியவகை பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட மீனை அவர் உட்கொண்டுள்ளார். இதனால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மட்டுமின்றி, காயங்களுடன், இந்த பாக்டீரியா காணப்படும் கடல் நீரில் குளித்தாலும், உயிருக்கு ஆபத்து தான் என கூறுகின்றனர். உடலில் நோயெதிர்ப்பு சக்தியை இந்த பாக்டீரியா பலவீனமாக்கும் எனவும் ஆண்டுக்கு 150 முதல் 200 பேர்கள் வரையில் இந்த பாக்டீரியா பாதிப்பால் சிகிச்சை பெறுவதாகவும், இதில் ஐந்தில் ஒருவர் மரணமடைவதாகவும் தெரிவித்துள்ளனர்.