டிரம்ப் வீட்டின் குளியலறையில் ரகசிய ஆவணங்கள்.. குற்றம் உறுதியானல் 100 ஆண்டுகள் வரை தண்டனை!!
வீட்டில் ரகசிய ஆவணங்களை சட்டவிரோதமாக வைத்திருந்ததாக அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை அந்நாட்டு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார். இதனால் 4 ஆண்டுகள் டிரம்ப் அமெரிக்காவின் அதிபராக இருந்தார். பின்னர் 2020-ம் ஆண்டு தேர்தலில் ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் தனது பதவி காலத்தில் கையாண்ட ஆவணங்களை ஆவணக் காப்பகத்திடம் ஒப்படைக்காமல் அவற்றை தன்னுடன் எடுத்து சென்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அரசின் ரகசிய ஆவணங்களை டிரம்ப் வைத்து கொண்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் புளோரிடாவில் உள்ள டிரம்ப் வீட்டில் சோதனை நடத்தப்பட்டு 100-க்கும் மேற்பட்ட ரகசிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
இதற்கிடையே ரகசிய ஆவணங்களை எடுத்து சென்ற விவகாரத்தில் டிரம்ப் மீது 7 கிரிமினல் குற்றச்சாட்டுகள் அமெரிக்காவின் மியாமி நீதிமன்றத்தில் நேற்று பதிவு செய்யப்பட்டது. டிரம்ப் மொத்தம் 37 கிரிமினல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார், இதில் 31 எண்ணிக்கையிலான தேசிய பாதுகாப்பு தகவல்களை வேண்டுமென்றே தக்கவைத்துக்கொண்டது.
அமெரிக்காவின் அணு சக்தி திட்டங்கள், அமெரிக்கா மற்றும் வெளிநாடுகளின் பாதுகாப்பு, ஆயுத திறன்கள், ராணுவ தாக்குதலுக்கு அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் சாத்தியக் கூறுகள் வெளிநாட்டு தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் திட்டம் ஆகியவை தொடர்பாக ரகசிய ஆவணங்கள் இருந்ததாக பரபரப்பு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த 100-க்கும் மேற்பட்ட ரகசிய ஆவணங்கள் மற்றும் 11 ஆயிரம் அரசு ஆவணங்கள் டிரம்ப் வீட்டின் குளியலறை மற்றும் ஹாலில் பாதுகாப்பற்ற முறையில் வைத்து கையாண்டதாகவும் விசாரணை அதிகாரிகளிடம் பொய் கூறியதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இவ்வழக்கு தொடர்பாக வருகிற 13-ந் தேதி மியாமி நீதிமன்றத்தில் டிரம்ப் நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது. அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களின் பிரிவில் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் 100 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வாய்ப்பு உள்ளது. குற்றபத்திரிகையில் டிரம்ப் தனது புளோரிடா கிளப்பில் குளியலறை மற்றும் ஷவரில் ரகசிய ஆவணங்களை வைத்து உள்ளார் என கூறப்பட்டு உள்ளது.